ஜெ. கைரேகை தொடர்பாக சென்னை ஐகோர்ட் விசாரிக்க தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

தேர்தல் ஆணைய படிவத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்திருந்தது தொடர்பான வழக்கை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
Published on

புதுடெல்லி:

கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சரவணன் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார். ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் சென்னை ஐகோர்ட்டில் இன்று ஆஜரான சிறை கண்காணிப்பாளர் மோகன்ராஜ், சிறையில் அடைக்கப்பட்ட போது ஜெயலலிதாவின் கைரேகையை பெறவில்லை என விளக்கமளித்துள்ளார். மேலு, ஜெயலலிதாவுக்கு ஆதார் அட்டை உள்ளதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், தேவைப்பட்டால் கைரேகையை ஒப்பிட்டு பார்க்கலாம் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர். இதற்கிடையே, ஜெயலலிதாவின் கைரேகையை ஒப்பிட்டு பார்க்க தடை விதிக்க கோரி ஏ.கே போஸ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், ஜெயலலிதா கைரேகை தொடர்பான ஆவணங்களை சோதனை செய்யவும், இந்த வழக்கை விசாரிக்கவும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், டாக்டர் சரவணன் உள்பட வழக்கில் தொடர்புடைய 28 பேரும் பதிலளிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com