மாட்டிறைச்சிக்கு தடை: மத்திய அரசு உத்தரவுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்

மாட்டிறைச்சிக்கு தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த புதிய உத்தரவுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மாட்டிறைச்சிக்கு தடை: மத்திய அரசு உத்தரவுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்
Published on

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை விற்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசின் உத்தரவுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஒருவரின் உணவு வி‌ஷயத்தில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்று கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கூறினர். மேலும் இந்த உத்தரவை வாபஸ் பெறக்கோரி, மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டங்களும் நடத்தினர்.

மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகளை திரும்ப பெறக்கோரி முதலமைச்சர் பினராயி விஜயன், பிரதமருக்கு கடிதம் எழுதினார். மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவு குறித்து விவாதிப்பதற்காக கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் திருவனந்தபுரத்தில் இன்று நடந்தது. காலை 9 மணிக்கு கூட்டத்தை சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில், முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அனைத்துத் துறை மந்திரிகளும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.


மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், மத்திய அரசின் புதிய உத்தரவால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், சுமார் 5 லட்சம் பேர் வேலையிழப்பார்கள் என்று தெரிவித்தார். இதையடுத்து தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இது தொடர்பாக சட்டசபையில் அனைத்துக்கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com