காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசுடன் சேர்ந்து தமிழக அரசு துரோகம்- ராமதாஸ் குற்றச்சாட்டு

காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசுடன் சேர்ந்து தமிழக அரசு துரோகம் செய்துவிட்டது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss
காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசுடன் சேர்ந்து தமிழக அரசு துரோகம்- ராமதாஸ் குற்றச்சாட்டு
Published on

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களில் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இச்சிக்கலில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தமிழகஅரசு, மவுனமாகியிருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை கணக்கில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு தாமதப்படுத்தும் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான்.

அதனால் தான் உச்சநீதி மன்றத் தீர்ப்பு வெளியானதுமே காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் அடுக்கக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்றும், அதன் தொடர்ச்சியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றும் பா.ம.க. யோசனை தெரிவித்தது.

அதன்படியே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிய தமிழக அரசு, அதன்பின் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளில் உறுதியாக இல்லாமல் விலகிச் செல்கிறது.

காவிரிப் பிரச்சினையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரங்களை பிரதமரிடம் சந்திக்க தமிழக அரசின் சார்பில் நேரம் கேட் கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகக் குழுவை சந்திக்க பிரதமர் தயாராக இல்லை என்ற தகவல் மத்திய அரசிலிருந்து தெரிவிக்கப்பட்ட பின், அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி முடிவு செய்திருக்க வேண்டும்.

ஆனால், முதல்- அமைச்சரோ எதிர்க்கட்சித் தலைவரை மட்டும் அழைத்துப் பேசினார். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரப் பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை என்றாலும் கூட, பிரதமருடனான சந்திப்புக் குறித்து திங்கட்கிழமைக்குள் சாதகமான முடிவு வரக் கூடும் என்றும், அவ்வாறு எந்த தகவலும் வரவில்லை என்றால் 8-ந்தேதி சட்டப் பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றலாம் என முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் அரசுத் தரப்பில் கசியவிடப்பட்டன.

ஆனால், திங்கட்கிழமை மத்திய அரசிடமிருந்து சாதகமான தகவல்கள் எதுவும் வரவில்லை. மாறாக, காவிரிச் சிக்கல் குறித்து விவாதிக்க சம்பந்தப்பட்ட 4 மாநில தலைமைச் செயலர்களின் கூட்டத்தைக் கூட்டுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்தக் கூட்டத்தால் தமிழகத்திற்கு 10 பைசாவுக்குக் கூட பயன் கிடையாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தாமதப்படுத்துவதற்காக மத்திய அரசு கடைபிடிக்கும் மற்றொரு தந்திரம் தான் இதுவாகும்.

ஆனால், தமிழக அரசோ தலைமைச் செயலர்கள் கூட்டத்தால் எல்லா சிக்கலும் தீர்ந்து விடும் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி, அதையே நம்பிக் கொண்டிருக்கிறது.

குறைந்தபட்சமாக பேரவையைக் கூட்ட தயாராக இல்லாமல் தமிழக அரசு பின்வாங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் துணை போயிருப்பது வெட்கக்கேடானது.

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் போட்டிப்போட்டும், கூட்டணி அமைத்தும் தாரை வார்ப்பது இன்றும் தொடர்கிறது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசுடன் பினாமி அரசும் இணைந்து கூட்டுத் துரோகம் செய்யக் கூடாது.

இன்னும் கேட்டால் நாளை மறுநாள் கூட்டத்திற்குப் பிறகு அடுத்தடுத்துக் கூட்டங்கள் கூட்டப்படக் கூடும் என்று மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.ராவ் கூறியிருக்கிறார். அது முடியும் வரை தமிழக அரசு காத்திருந்தால் காவிரியில் தமிழகத்திற்குரிய கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் மத்திய அரசின் துணையுடன் கர்நாடக அரசு பறித்துச் சென்று விடும்.

காவிரி விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய இந்நேரத்தில் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எந்த உரிமையையும் சமரசம் செய்து கொள்ளக்கூடிய அரசு தமிழகத்தில் அமைந்திருப்பது தான் பெரும் சாபக் கேடு ஆகும். தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்படும் வேளையில், மண் புழு அளவுக்கூட எதிர்ப்புத் தெரிவிக்காமல் தமிழக அரசு அடங்கிக் கிடப்பது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com