அரசியல் பிரவேசம்: ஆண்டின் இறுதி நாளில் டுவிட்டரை ஆக்கிரமித்த ரஜினிகாந்த்

அரசியல் கட்சி தொடங்கி, தனியாக தேர்தலை சந்திப்பேன் என ரஜினிகாந்த் அறிவித்த பின்னர் டுவிட்டரின் இன்றைய ‘முடிசூடா மன்னன்’ ஆக அவர் உயர்ந்துள்ளார். #Rajinikanth #Rajinikanthpoliticalentry
அரசியல் பிரவேசம்: ஆண்டின் இறுதி நாளில் டுவிட்டரை ஆக்கிரமித்த ரஜினிகாந்த்
Published on

‘எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது - ஆனா.., வர வேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வருவேன்’ என்று கூறிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை இன்று உறுதிப்படுத்தினார்.

தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என அவர் தெரிவித்துள்ள நிலையில், முதல் நபராக ரஜினியின் நண்பர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தி வரவேற்றார். அவரை தொடர்ந்து நடிகை குஷ்பூ, கஸ்தூரி, நடிகர் விவேக், ராகவா லாரன்ஸ் உள்ளிடோர் வரிசையாக தங்களது டுவிட்டர் பக்கங்களில் மூலம் ரஜினியை வாழ்த்தி வருகின்றனர்.

ரஜினி தனது ரசிகர்களுக்கு அளித்த ‘இன்ப அதிர்ச்சியை’ தமிழக திரைத்துறை பிரபலங்கள் மட்டுமின்றி, பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், அனுபம் கேர் உள்ளிட்டவர்களும் தங்களது ரசிகர்களுடன் டுவிட்டர் மூலம் பரிமாறி வருகின்றனர்.

சமீபத்தில் டுவிட்டர் எடுத்த ஒரு சர்வேயில் இந்த ஆண்டில் இந்திய அளவில் பரபரப்பான விவாதப்பொருளாக மாறி இந்த ஆண்டில் நமது நாட்டில் முதல் மூன்று இடங்களை பிடித்த ‘ஹேஷ்டாக்’ பற்றிய தகவல் வெளியானது.

இதில் செய்தி மற்றும் ஆட்சித்துறை சார்ந்த பிரிவில் பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுடன் வானொலி மூலம் உரையாற்றும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி முதலிடம் பிடித்திருந்தது.

இன்றும் மாதத்தின் இறுதி நாளான 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக உள்ள நிலையில் காலை 11 மணியளவில் பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பானது.

ஆனால், அந்த பரபரப்பை பின்னுக்குத்தள்ளி, ஆண்டின் இறுதி நாளான இன்றைய தினத்தில் டுவிட்டரில் அதிகமான ஹேஷ்டேக்களுடன் இந்திய அளவில் ரஜினிகாந்தின் பெயர் இடம் பிடித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

சினிமாத்துறை பிரபலங்கள் மட்டுமின்றி, மு.க.ஸ்டாலின், தமிழிசை சவுந்திரராஜன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பாக கருத்துகளை கூறி வருகின்றனர்.

இந்த கருத்துகள் அனைத்தும் ரஜினிகாந்த் என்னும் ஹேஷ்டேக்களுடன் பிரபல அச்சு மற்றும் ஒளி ஊடகங்கள் தங்களது டுவிட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருவதாக டுவிட்டரின் இன்றைய ‘முடிசூடா மன்னன்’ ஆக ரஜினிகாந்த் உயர்ந்துள்ளார். #Rajinikanth #Rajinikanthpoliticalentry #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com