

6-வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி, முந்தைய ஊதிய விகிதம் மற்றும் தர ஊதியத்தின் அடிப்படையில் தொடர்ந்து சம்பளம் பெற்று வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 262 சதவீதத்திலிருந்து 269 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு 2026 ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இதே உயர்வை நடைமுறைப்படுத்த நிதித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. புதுச்சேரி அரசின் உத்தரவின்படி, 6-வது ஒன்றிய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி நிர்ணயிக்கப்பட்ட பழைய ஊதிய விகிதம் மற்றும் தர ஊதியத்தின் அடிப்படையில் தொடர்ந்து ஊதியம் பெற்று வரும் தகுதியான அரசு ஊழியர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும்.
மேலும், தகுதியுள்ள ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் உரிய அதிகாரியின் ஒப்புதலுடன் பணியமர்த்தப்பட்டு, 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி ஊதியம் அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் தொடர்புடைய பணியாளர் பிரிவினருக்கும் இந்த உயர்வு பொருந்தும்.
புதுச்சேரி அரசின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளும் தங்களிடம் உள்ள நிதி ஆதாரங்களின் அடிப்படையில் இந்த உயர்வை வழங்கிக்கொள்ளலாம்.
இந்த அகவிலைப்படி உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவினங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் துறைகள் தங்களது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்தே மேற்கொள்ள வேண்டும். இதற்காக அரசிடம் கூடுதல் நிதி ஒதுக்கீடு அல்லது மானியம் கோரக்கூடாது.
தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள நிதி வசதியை பொறுத்து உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்கிக்கொள்ளலாம்.
இந்த தகவலை புதுச்சேரி அரசின் நிதித்துறை சார்பு செயலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.