மத்திய அரசு அரசியல் சட்டத்தை மீறும் செயல்களில் ஈடுபடுகிறது: பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு

காவிரி நீர் பிரச்சனையை விவசாயிகளின் பிரச்சனையாக கருதாமல் தமிழர்களின் தலையாய பிரச்சனையாக பார்க்க வேண்டும் என்று பழ. நெடுமாறன் கூறினார்.
மத்திய அரசு அரசியல் சட்டத்தை மீறும் செயல்களில் ஈடுபடுகிறது: பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று தொடங்கினர். இதில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

தமிழ் நாட்டில் அரசியல் சட்டத்தை மீறும் செயல்பாட்டில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்ற தீர்ப்பு பெற்றும் அதனை கர்நாடக அரசு செயல்படுத்த வில்லை. உச்ச நீதி மன்றம் இரு முறை உத்தரவிட்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன் வரவில்லை. இது அப்பட்டமாக அரசியல் சட்டத்தை மீறும் செயல். இது தொடர்பாக பிரதமர் மோடி மீது உச்ச நீதி மன்றம் அவமதிப்பு வழக்கு தொடர முடியும். ஆனால் உச்சநீதி மன்றம் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது.

மேலும் மத்திய அரசு உச்சநீதி மன்ற தீர்ப்பை செயல்படுத்தாமல் ஒற்றை தீர்ப்பாயத்தை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கர்நாடகத்தில் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்து வருகிறது.

அரசியல் நோக்கத்திற்காக காங்கிரசும், பா.ஜனதாவும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைளை நிறை வேற்றமால் இருக்கின்றன. இந்த பிரச்சினையில் இருந்து மீள வேண்டுமனால் இதனை விவசாயிகளின் பிரச்சனை என்று பிரித்து பார்க்காமல் ஒட்டு மொத்த தமிழர்களின் தேசிய பிரச்சினையாக பார்க்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளை கேட்டுக்கொள்கிறோம்.

காவிரி நீர் பிரச்சனையை விவசாயிகளின் பிரச்சனையாக கருதாமல் தமிழர்களின் தலையாய பிரச்சனையாக பார்க்க வேண்டும். இதற்காக தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்து போராட வேண்டும். அதற்கு முன்னோடியாக நடத்தப்படும் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு பொதுமக்கள் முழு ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com