ஒரிஜினல் லைசென்ஸ் தமிழக அரசு உத்தரவை திரும்ப பெற வேண்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஒரிஜினல் லைசென்ஸ் தமிழக அரசு உத்தரவை திரும்ப பெற வேண்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை
ஒரிஜினல் லைசென்ஸ் தமிழக அரசு உத்தரவை திரும்ப பெற வேண்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை
Published on

சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வாகனம் ஓட்டுபவர்கள் இன்று முதல் தங்களது ஒரிஜினல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் கேட்கும்போது காண்பிக்க வேண்டும் என்றும் ஒரு உத்தரவை ‘குதிரை பேர’ அரசு பிறப்பித்திருப்பதற்கு தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்காதவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சிறைதண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் அல்லது 500 ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும் என்ற ‘குதிரை பேர’ அரசின் ‘கோமாளித்தனமான’ உத்தரவுக்கு, ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது.

சென்னை மாநகரத்தின் சாலைகளில் போக்குவரத்தைச் சரிசெய்வதை விடுத்து, மூலை முடுக்குகளில் ஒளிந்து நின்று இருசக்கர வாகன ஓட்டிகளையும், வாடகைக் கார் ஓட்டுநர்களையும், ஆட்டோ ஓட்டுநர்களையும் பாய்ந்துப் பிடித்து சில போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் ‘பஞ்சாயத்து’ செய்யும் வாட்ஸ் அப் காட்சிகள் சமூக வலைதளங்களில் வந்து, காவல்துறையில் உள்ள நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கும் பெரும் தலை குனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே கெடுபிடி செய்து கொண்டிருக்கும் போக்குவரத்துக் காவல்துறை மற்றும் மோட்டார் வாகனப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு, இன்னொரு ஆயுதத்தைக் கையில் வசதியாகக் கொடுத்தது போல், “ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாதவரைப் பிடித்து அபராதம் வசூலிக்கலாம்.

மூன்று மாதம் சிறையில் தள்ளலாம்”, என்ற அதிகாரம் அலுவலகப் பணிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், கூலி வேலைகளுக்கும், கட்டிட வேலைகளுக்கும் இருசக்கர வாகனத்தில் செல்லும் சாதாரண சாமானிய மக்கள் ஆகியோருக்கு தாங்க முடியாத அவதிகளையும், அலைச்சல்களையும் அளிக்கும்.

ஆகவே, வாகன ஓட்டிகளையும், ஓட்டுநர்களையும் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கும் “ஒரிஜினல் லைசென்ஸை வைத்திருக்க வேண்டும்” என்ற இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற்று, ஏற்கனவே இருக்கின்ற நடைமுறையை கடைப் பிடிக்க வேண்டும் என்பது தான் அனைத்து பொது மக்களின் எதிர்பார்ப்பு.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com