ஐ.டி. வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டும் பெண் - காரணத்தால் வியந்த பயணிகள்..!

குடும்பச்சூழல் காரணமாக தான் இந்த முடிவை எடுத்தாக தெரிவித்துள்ளார்.
ஐ.டி. வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டும் பெண் - காரணத்தால் வியந்த பயணிகள்..!
Published on: 

ஐ.டி வேலையை விட்டு ரேபிடோ ஓட்டும் பெண்

பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் ஒருவர் தான் பணிபுரிந்த ஐ.டி வேலையை விட்டுவிட்டு தற்போது ரேபிடோ ஆட்டோ ஓட்டி வருகிறார். தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு தாயை கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

உரையாடல் மூலம் தெரியவந்த கதை

பெங்களூருவில் ஆட்டோவில் பயணம் செய்த உள்ளடக்க உருவாக்குநர் (content creator) தன்வி, ஆட்டோ ஓட்டுநரிடம் பேசியபோது இது தெரியவந்துள்ளது.

அவர்கள் இருவருக்குமான உரையாடலில் அவர் முன்பு ஐ.டி. துறையில் பணியாற்றியதாகவும், தற்போது குடும்ப பொறுப்புகள் காரணமாக இந்த வேலையை தேர்ந்தெடுத்தாகவும் கூறியிருக்கிறார். இதையடுத்து அவர்களது உரையாடலை தன்வி இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பகிர்ந்தார்.

இந்த வேலை என்னை தாயுடன் நெருக்கமாக இருக்க வைத்தது

எனது தந்தை உயிரிழந்த வேலையில் குடும்ப பொறுப்புகளை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அப்போதுதான் இந்த வேலையை தேர்ந்தெடுத்தேன் என்று கூறினார். ஐ.டி. வேலையில் தொடர்ந்து நைட் ஷிப்ட் பணிக்கு செல்ல வேண்டியிருந்ததால் தாயுடன் போதிய நேரம் செலவிட முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தாயை இரவு நேரங்களில் தனியாக விட்டுச் செல்ல விரும்பாததால், தனது வேலையை மாற்ற முடிவு செய்ததாகவும், ஐ.டி. வேலையில் பகல் நேர பணிக்கு மாறுவதற்கான வாய்ப்பு கிடைக்காததால், ஆட்டோ ஓட்டும் தொழிலை தேர்வு செய்ததாக தன்வி தெரிவித்துள்ளார்.

ஐ.டி வேலையை விட அதிகமாக சம்பாதிக்கிறேன்

ஆட்டோ ஓட்டுவது மோசமான வேலை இல்லை என்று கூறிய அவர், தற்போது ஐ.டி. வேலையில் பெற்ற சம்பளத்தை விட அதிகமாக சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆட்டோ ஓட்டுவதன் மூலம் தனது நேரத்தை தானே நிர்வகிக்க முடிவதாகவும், தாயுடன் அதிக நேரம் செலவிட முடிவதாகவும், ஆரம்பத்தில் அவரது குடும்பத்தினர் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

வைரலாகும் இந்த காணொளி

தான் ஆட்டோ ஓட்டுவதை பார்த்து சில பயணிகள் ஆச்சரியப்படுவதாக தன்வி தெரிவித்துள்ளார். குறிப்பாக, அவர் சரளமாக ஆங்கிலம் பேசுவதை பார்த்த சிலர், நன்றாக ஆங்கிலம் பேசுகிறீர்கள்... இன்னும் ஏன் ஆட்டோ ஓட்டுகிறீர்கள்? என கேட்பதாகவும் கூறியுள்ளார்.

இருவரின் இந்த உரையாடல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த பெண்ணின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குடும்ப பொறுப்புக்காக தனது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்ட அவரது முடிவு குறித்து பலரும் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com