

பிரதமர் மோடி, டெல்லியில் நடந்த சின்மய அமிர்த மஹோத்சவ உலக மாநாட்டை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்த விழாவில் பங்கேற்பது உண்மையிலேயே ஒரு தனித்துவமான ஆன்மீக அனுபவம் ஆகும். பல தசாப்தங்களாகத் தொடரும் சின்மய அமைப்பின் பயணம் ஒரு தெய்வீக உறுதியால் அடையாளப்படுத்தப்படுகிறது.
சின்மய அமைப்பின் முயற்சிகளால், லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தியாவின் கலாச்சாரத் தூதுவர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.
நமது தேசம் நமது கலாச்சாரத்தின் பிறப்பிடம். இந்த தேசமே நமது இருப்பின் அடித்தளம் ஆகும். கடந்த 25 ஆண்டுகளாக அரசாங்க தலைவராக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். தேசத்திற்கு என்னால் இயன்றவரை சிறந்த சேவையை வழங்க என்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன். இந்த நீண்ட பயணத்தில் நாட்டின் இளைஞர்களே எனது முயற்சிகளிலும், கொள்கைகளிலும் மையப் புள்ளியாக இருந்து வந்துள்ளனர்.
நமது கல்வி முறை புதிய இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப அமைய வேண்டும். இதற்காக நாங்கள் புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
இது இந்திய அறிவு மரபு, தாய்மொழியில் கல்வி, நவீன அறிவியல், புதிய தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. கடந்த சில தசாப்தங்களாக புதிய சவால்களும் சமூகத் தீமைகளும் உருவெடுத்துள்ளன. அவற்றை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு நம்மிடமே உள்ளது.
நம்மை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டும். சுயசார்பின் முக்கியத்துவம் குறித்து குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா எனும் இலக்கை அடைவதற்கான தீர்மானத்தில் ஒவ்வொரு தனிமனிதனையும் நாம் ஈடுபடுத்த வேண்டும். இந்த இலக்குகளை அடைய நாம் இன்னும் கூடுதல் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு மோடி கூறினார்.
மோடி தனது உரையின் போது,"விவேகானந்தர் பாறை நினைவு இல்லம் நாடு முழுவதிலும் இருந்தும், உலகம் முழுவதிலும் இருந்தும் வரும் லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு ஒரு ஊக்கமளிக்கும் இடமாகத் திகழ்வதாக கூறினார்.