UPI புதிய கட்டண விதிமுறைகள்: ஆன்லைனில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய கூடுதல் கட்டணமா? மத்திய அரசு விளக்கம்!

அக்டோபர் 15, 2026 முதல் UPI பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டண விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன.
 UPI Payment
Published on
Summary

புதிய கட்டண மாற்றம் குறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் அளித்த விளக்கத்தின்படி, அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும் ரூ.5 MDR கட்டணத்தை பயணிகள் செலுத்த வேண்டியதில்லை.

வரும் அக்டோபர் 15, 2026 முதல் UPI பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டண விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. வணிக நிறுவனங்களுக்கு UPI மூலம் செய்யப்படும் ரூ.2,000க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் வரை வணிக தள்ளுபடி வீதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய ரெயில்வே டிக்கெட் முன்பதிவு சேவைக்கு இதில் சிறப்பு விலக்கு மற்றும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே டிக்கெட் முன்பதிவுகளுக்கு 0.4 சதவீத கட்டணத்திற்கு பதிலாக, பரிவர்த்தனை ஒன்றுக்கு நிலையான தொகையாக ரூ.5 மட்டுமே MDR ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் மீது கூடுதல் நிதிச்சுமை இல்லை

இந்த புதிய கட்டண மாற்றம் குறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் அளித்த விளக்கத்தின்படி, அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும் ரூ.5 MDR கட்டணத்தை பயணிகள் செலுத்த வேண்டியதில்லை. இந்த சேவைக்கட்டணம் வணிகர் தரப்பிலேயே வசூலிக்கப்படும். எனவே, பொதுமக்கள் UPI மூலம் ரூ.2,000க்கு மேல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, டிக்கெட் கட்டணத்தை தவிர வேறு எந்த கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. வங்கிகளும் வணிகர்களும் இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தக்கூடாது என்று மத்திய நிதி அமைச்சகமும் அறிவுறுத்தியுள்ளது.

வழக்கமான வர்த்தக நிறுவனங்களில் ரூ.10,000 மதிப்பிலான பொருளை UPI மூலம் வாங்கும் போது, 0.4 சதவீத MDR அடிப்படையில் ரூ.40 வரை கட்டணம் விதிக்கப்படும். ஆனால், ரெயில்வே டிக்கெட் முன்பதிவில் தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அதாவது ரூ.5,000 அல்லது ரூ.10,000 ஆக இருந்தாலும், நிலையான சேவைக் கட்டணமாக ரூ.5 மட்டுமே கணக்கிடப்படும். அதேபோல, ரூ.2,000 வரை செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு எந்தவித MDR கட்டணமும் கிடையாது. மேலும், தனிநபர்களுக்கு இடையேயான (Person-to-Person) பணப்பரிமாற்றங்கள் எப்போதும் போல முற்றிலும் இலவசமாகவே தொடரும்.

ரெயில்வே நிர்வாகத்திற்கு முக்கியத்துவம்

ஒரு தனிப்பட்ட பயணிக்கு ரூ.5 என்பது சிறிய தொகையாகத் தோன்றினாலும், நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் இணையவழியில் டிக்கெட் முன்பதிவு செய்வதால், ரெயில்வே மற்றும் IRCTC நிர்வாகத்திற்கு இது குறிப்பிடத்தக்க தொகையாகும்.

உதாரணமாக, தினமும் ரூ.2,000க்கு மேல் UPI மூலம் 1 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டால், ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம் வீதம் ஆண்டிற்கு சுமார் ரூ.18.25 கோடி வரை பரிவர்த்தனை கட்டணமாக வரும். இந்தத் தொகையை ரெயில்வே, IRCTC, வங்கிகள் மற்றும் கட்டணச் சேவை நிறுவனங்கள் எவ்வாறு பகிர்ந்துகொள்ளப் போகின்றன என்பதைப் பொறுத்தே அதன் நிதித் தாக்கம் இருக்கும்.சுருக்கமாகக் கூறின், அக்டோபர் 15க்குப் பிறகும் UPI மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு எந்தவித கூடுதல் கட்டணச் சுமையும் இருக்காது என்பது உறுதியாகியுள்ளது

X

Maalai Malar
www.maalaimalar.com