

நாடு முழுவதும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் SIR மேற்கொள்ளப்பட்டது. இதில் 20 மாநிலங்களில் இதுவரை SIR நிறைவடைந்துள்ளது. இதில் 13 கோடி வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே Form 6 படிவத்தில் திருத்தம் கொண்டு வந்ததில் ஞானேஷ் குமாருக்கும் மற்ற ஆணையருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்ததாக தகவல் வெளியானது. இதனால் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் அமித் ஷா காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அமித் ஷா கூறுகையில் "SIR மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டு சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். 2029-ல் காங்கிரஸ் தொடர்ந்து 4-வது முறையாகத் தோல்வியடையும்" என்றார்.
குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-
குஜராத்தில் கிடைத்துள்ள இந்த மாபெரும் வெற்றி வாக்காளர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது. குஜராத் மற்றும் ஒட்டுமொத்த இந்திய மக்களும் நரேந்திர மோடிக்கு ஒரு பாறை போல உறுதுணையாக நிற்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.
கடந்த தேர்தலுக்குப் பிறகு, காந்திநகர் மாநகராட்சித் தேர்தலில் பாஜக தனது வாக்கு சதவீதத்தை 10% அதிகரித்துள்ளது. இதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். குறிப்பாக இந்தச் செய்தி ராகுல் காந்தியைச் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன். அதாவது, கடந்த 41 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி இங்கு ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை.
நான் ராகுல் ஜியிடமும் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். இந்த தேர்தல் முடிவுக்கு காரணம் எஸ்.ஐ.ஆர். (SIR) என்று நீங்கள் கருதுகிறீர்களா? பா.ஜ.க. மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கை நீங்கள் புறக்கணிக்கிறீர்களா?.
நீங்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் நீங்கள் ஆட்சியில் இருந்த ஒரு முக்கிய மாநிலத்தில், கடந்த 41 ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற நீங்கள் தவறிவிட்டீர்கள். இது தீவிரமாகச் சுய பரிசோதனை செய்யப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். சமீபத்தில் மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. அங்கேயும் கூட காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
தற்போதைய SIR நடவடிக்கை 2024-க்குப் பிறகே தொடங்கப்பட்டிருந்தாலும், ராகுல் காந்தி அரசியலில் நுழைந்த காலத்திலிருந்தே காங்கிரஸ் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்து வருகிறது.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.