திருப்பதி கலப்பட நெய் மோசடி: சுகிருதி ஃபுட்ஸ் உரிமையாளரை கைது செய்த அமலாக்கத்துறை

2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மோசடியாக வழங்கப்பட்ட நெய்யின் மதிப்பு ரூபாய் 230 கோடியாக உள்ளது. அதில் 96 கோடி ரூபாய் மதிப்புள்ள கலப்பட நெய், மங்களாவால் தயாரிக்கப்பட்டுள்ளது.
Tirupati adulterated ghee scam
Published on
Summary

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படும் செய்ததாக கூறப்படும் பணமோசடி வழக்கில், சுகிருதி ஃபுட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கைலாஷ் சந்த் மங்களா என்பவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் கலப்படம் செய்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

கலப்பட நெய்

திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கலப்படம் செய்யப்பட்ட நெய்யானது, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், பாம் கெர்னல் ஆயில், பாமோலின் மற்றும் எம்ஜி-90, மோனோகிளிசரைடுகள், மைவாசெட் சாஃப்ட் 400, அசிட்டிக் அமில எஸ்டர் உள்ளிட்ட ரசாயணங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இவை, அக்மார்க் ஸ்பெஷல் கிரேடு பசு நெய் என்ற பெயரில் திமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

96 கோடி மோசடி

2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மோசடியாக வழங்கப்பட்ட நெய்யின் மதிப்பு ரூபாய் 230 கோடியாக உள்ளது. அதில் 96 கோடி ரூபாய் மதிப்புள்ள கலப்பட நெய், மங்களாவால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மங்களா என்பவர், கலப்பட பொருட்களை பெற உதவியதோடு தனது தொழிற்சாலை வளாகத்தில் கலப்பட நெய்யையும் தயாரித்துள்ளார்.

ஸ்ரீ வைஷ்ணவி டெய்ரி ஸ்பெஷாலிட்டிஸ், மல்கங்கா மில்க் & அக்ரோ ப்ராடக்ட்ஸ் மற்றும் ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் உள்ளிட்ட பல்வேறு போலி நிறுவனங்கள் மூலம் கலப்படம் செய்யப்பட்ட நெய் விநியோகத்தையும் மங்களா ஒருங்கிணைத்துள்ளார்.

மேலும், கலப்படங்களின் உண்மையான பயன்பாட்டை மறைத்து, அசல் பசு நெய்யின் முறையான உற்பத்தி மற்றும் விநியோகம் போன்ற தோற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன், நெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் விற்பனை மற்றும் கொள்முதல் தொடர்பான போலிப் பதிவுகளை மங்களா உருவாக்கியுள்ளார் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

சுகிருதி ஃபுட்ஸ் நிறுவன உரிமையாளர் கைது

இதையடுத்து இந்த குற்றச்சாட்டுகளின் பேரில், செப்டம்பர் 17 அன்று ஐதராபாத்தில் உள்ள அலுவலகத்தில் மங்களா காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

பின்னர் அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com