

பயணத்தின் முதல் நாளான அக்டோபர் 30 அன்று, பனாஸ்கந்தா மாவட்டம் பில்டியில் அமைக்கப்பட்டுள்ள பாரத போவின் பிரீடிங் அண்ட் ரிசர்ச் சென்டர் என்ற அதிநவீன கால்நடை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை மற்றும் நாளை மறுநாள் (அக்.31) ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலத்திற்குச் செல்கிறார். இந்தப் பயணத்தின் போது, பனாஸ்கந்தா மாவட்டத்தில் 14,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும் வைக்க உள்ளார். மேலும், ஒற்றுமை நகரில் (ஏக்தா நகர்) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.
பயணத்தின் முதல் நாளான அக்டோபர் 30 அன்று, பனாஸ்கந்தா மாவட்டம் பில்டியில் அமைக்கப்பட்டுள்ள பாரத போவின் பிரீடிங் அண்ட் ரிசர்ச் சென்டர் என்ற அதிநவீன கால்நடை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 127 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையம் கங்கிரேஜ் மாட்டு இனத்தின் பெருக்கத்திற்கும், மரபணு மேம்பாட்டுக்கும் பெரிதும் உதவும். தொடர்ந்து, பனாஸ் டெய்ரியின் இரண்டு பயோ-சிஎன்ஜி ஆலைகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், அகமதாபாத் மெட்ரோ இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளான விமான நிலையம் மற்றும் கிஃப்ட் சிட்டி இணைப்புகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் வகையில், பிஎம்-கிசான் திட்டத்தின் 24-வது தவணை தொகையான ரூ.19,000 கோடியை பிரதமர் மோடி இந்த விழாவில் விடுவிக்கிறார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள். மேலும், அகமதாபாத் (சபர்மதி) - வாரணாசி எக்ஸ்பிரஸ் மற்றும் மெக்சனா - பெச்சராஜி - சபர்மதி மெமு ரெயில் சேவைகளையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் முடிக்கப்பட்ட பல திட்டங்களையும் அவர் திறந்து வைக்க உள்ளார்.
பயணத்தின் இரண்டாம் நாளான அக்டோபர் 31 அன்று, சர்தார் வல்லபாய் படேலின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமைச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அங்கு ரூ. 400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, தேசிய ஒற்றுமை தின விழாவைக் கொண்டாடும் விதமாக 'பாரத் பர்வ் 2026' மற்றும் 'ஏக்தா பிரகாஷ் பர்வ்' ஆகிய கலாச்சார மற்றும் விளக்குத் திருவிழாக்களை அவர் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிகளில் முப்படை மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெறுகிறது.