பாகிஸ்தானில் கோர விபத்து: ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் 10 பேர் பரிதாப பலி

படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கராச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ambulance explodes
Published on: 

பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சிந்து மாகாணத்தில் உள்ள தார்பார்க்கர் மாவட்டத்தில் நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில், ஆம்புலன்ஸுக்குள் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் பெண்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தார்பார்க்கர் மாவட்டத்தின் நாகர்பார்க்கர் பகுதியில் உள்ள ஒரு அடிப்படை சுகாதார மையத்திலிருந்து, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மற்றும் சில நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் மாற்றி அனுப்பும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது நோயாளிகளின் வசதிக்காக ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு உள்ளேயே ஆக்சிஜன் சிலிண்டரை மாற்றி வைக்க முயன்றபோது திடீரென அது பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. சிலிண்டர் வெடித்த வேகத்தில் ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்ததால், வாகனத்தில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் உயிரிழந்துள்ளனர்.

இந்த கோர விபத்தில் மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் சென்ற உறவினர்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்ததாக மாவட்ட காவல்துறைத் தலைவர் ஆரிப் அஜீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கராச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து உரிய மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க மருத்துவ மற்றும் அவசர கால வாகனங்களில் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X