ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு 5 ஆண்டுகள் சிறை

தெஹ்ரான் புரட்சிகர நீதிமன்றம் 5 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
Jafar Panahi
Published on: 

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு தெஹ்ரான் புரட்சிகர நீதிமன்றம் 5 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

5 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த புதிய உத்தரவின்படி அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் 2 ஆண்டுகளுக்குப் பயணம் செய்யவும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

ஏற்கெனவே, ஈரானிய அரசுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த புதிய உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இயக்குநர் ஜாஃபர் பனாஹி 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.மேலும், அதே ஆண்டில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், திரைப்படங்களை இயக்கவும், திரைக்கதை எழுதுவதற்கும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது

ரகசியமான தீர்ப்பு

இந்தத் தீர்ப்பு அவர் இல்லாத நேரத்தில் ரகசியமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அவரது வங்கிச் கணக்குகள் திடீரென முடக்கப்பட்ட பிறகே, தமக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை அவரும் அவரது வழக்கறிஞரும் அறிந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் தனது இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்ஸிடென்ட்' (It Was Just an Accident) திரைப்படத்திற்காக மிக உயரிய விருதான பால்ம் டி ஓர் விருதினை வென்றுள்ளதோடு உலக அளவில் புகழ்பெற்ற விருதுகளையும் வென்றுள்ளார்.

இவரது 'திஸ் இஸ் நாட் எ ஃபிலிம்' (2011), 'டாக்ஸி' (2015), 'நோ பேர்ஸ்' (2022) மற்றும் 'இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்' (2025) போன்ற படங்கள் சர்வதேச அளவில் பல விருதுகளைக் குவித்துள்ளன.

ஈரான் அரசின் ஒடுக்குமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருவதால்,அரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் அவர் மீது ஈரான் அரசு இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com