இந்தியா-பிரான்ஸ் உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன: பிரதமர் மோடி

அரசியல் உறவுகளின் வலுவான அடித்தளத்தில் அமைந்துள்ளதால் இந்த உத்திசார் கூட்டாண்மை மிகவும் சிறப்பானது.
PM Modi
Published on

இந்தியா - பிரான்ஸ் உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன என்றும், நீண்டகால கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளின் வலுவான அடித்தளத்தில் அமைந்துள்ளதால் இந்த உத்திசார் கூட்டாண்மை மிகவும் சிறப்பானது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பாரிஸில் உள்ள சுவாமிநாராயண் கோயிலின் திறப்பு விழாவில் காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, பாரிஸில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான கோயில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் வாய்ப்புகளின் அடையாளமாக பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உத்திசார் கூட்டாண்மை:

"சமீப காலங்களில், இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான உறவுகள் புதிய உயரங்களை எட்டியுள்ளன. எனது நண்பரான அதிபர் மேக்ரானுடன் இணைந்து, இரு நாடுகளும் ஒரு சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையை உருவாக்கி வருகின்றன," என்றார்.

தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பாதுகாப்புத் துறை முதல் விண்வெளி மற்றும் பருவநிலை நடவடிக்கை வரை, இந்தியாவும் பிரான்ஸும் புதிய உத்வேகம் மற்றும் ஆற்றலுடன் இணைந்து முன்னேறி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

புத்தாக்க ஆண்டு:

தொடர்ந்து பேசும் போது, "நாங்கள் 2026-ஆம் ஆண்டை 'இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டாக' கொண்டாடவுள்ளோம். நீண்டகால கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளின் வலுவான அடித்தளத்தில் அமைந்துள்ளதால் இந்த உத்திசார் கூட்டாண்மை மிகவும் சிறப்பானது.

சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்துவதில் பிரெஞ்சு அறிஞர்கள் ஆற்றிய முக்கிய பங்கை மொழி ஆர்வலர்கள் அறிவார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தர் குறித்த ரோமன் ரோலண்டின் எழுத்துக்கள் நமது சமூகங்களை ஒன்றிணைத்தன.

இன்று, யோகா நமது நாடுகளுக்கு இடையிலான மக்களுக்கு தொடர்புகளுக்கான ஒரு பாலமாக மாறியுள்ளது. சர்வதேச யோகா தினத்தில் ஈபிள் கோபுரத்தில் இருந்து வெளியான காட்சிகள், பிரான்ஸில் யோகாவுக்கு உள்ள அபாரமான பிரபலத்தை வெளிப்படுத்துகின்றன," என்று அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com