

பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அங்கிருந்து காந்திநகரில் உள்ள 'லோக் பவன்' சென்ற அவரை, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் வரவேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமர் மோடியின் கடின உழைப்பு, தொலைநோக்கு பார்வையுடனான தலைமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை ஒவ்வொரு குடிமகனுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளன என்று ஆளுநர் தேவ்ரத் கூறியதாக 'லோக் பவன்' வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
பிரதமரின் தலைமையின் கீழ், உலக அரங்கில் இந்தியாவின் கௌரவம் புதிய உயரங்களை எட்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
"பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், குஜராத் மாநிலம் நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக உருவெடுத்துள்ளது. இயற்கை விவசாயம், தொழில் வளர்ச்சி மற்றும் பொது நலன் ஆகிய துறைகளில் புதிய அளவுகோல்களை அது உருவாக்கியுள்ளது" என்று ஆளுநர் மேலும் கூறினார்.
பிரதமர் மோடி சனிக்கிழமை டெல்லி புறப்பட்டு செல்வார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, 'லாப் பஞ்சமி' நன்னாளை முன்னிட்டு, நவம்பர் 14 அன்று பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அம்பாஜி கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்யவும், சடங்குகளை செய்யவும் பிரதமர் திட்டமிட்டிருந்தார்.
இருப்பினும், பிரதமரின் இந்த அம்பாஜி கோயில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு வியாழக்கிழமை இரவு அறிவித்தது.
பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த குஜராத் சட்டப்பேரவை சபாநாயகர் சங்கர் சௌத்ரி கூறுகையில், பண்டிகை காலங்களில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவதால், அவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே பிரதமர் தனது கோயில் பயணத்தை ரத்து செய்ததாக தெரிவித்தார்.