வந்தே மாதரம் பாடலின் முழுப் பதிப்பைக் கட்டாயமாக்கியதை எதிர்த்து மனுக்கள் - மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த விசாரணை நவ.30ம் தேதி நடைபெற உள்ளது.
வந்தே மாதரம் பாடலின் முழுப் பதிப்பைக் கட்டாயமாக்குவதை எதிர்த்து மனுக்கள் - மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Published on: 

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் அனைத்து பத்திகளையும் முழுமையாக பாடவேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தொடர்பாக பதிலளிக்க, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முழுப் பாடலையும் கட்டாயமாக்கியது இஸ்லாமிய வெறுப்பு என்று பௌத்த சமூக ஆர்வலர் ஒருவர் தாக்கல் செய்த மனுமீதும், இதன் முழுபதிப்பு ஒரு மதப் போர் பாடல் எனக் குறிப்பிட்டுள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தாக்கல் செய்த மனுமீதும் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி , வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு.

சுதந்திரம் அடைந்தது முதல் கடந்த 79 ஆண்டுகளாக இயற்கையை மட்டுமே போற்றும் முதல் 2 சரணங்கள் மட்டுமே தேசியப் பாடல் அந்தஸ்தில் பாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆறு பத்திகள் கொண்ட முழு பாடலையும் பாடுமாறு குடிமக்களைக் கட்டாயப்படுத்துவது தேசிய சகோதரத்துவத்தைப் பாதிக்கிறது என்றும், வகுப்புவாதப் பிளவுகளை ஆழப்படுத்துகிறது என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

எனவே ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வெளியிடப்பட்ட இரண்டு உள்துறை அமைச்சக அரசாணைகளையும் அரசியலமைப்புக்கு விரோதமானவை மற்றும் செல்லாதவை எனக் கூறி ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி அமர்வு, இரண்டு வாரங்களுக்குள் தனது பதிலை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

வந்தே மாதரம் கட்டாய உத்தரவை எதிர்த்த அனைத்து மனுக்கள்மீதான விசாரணையும் அடுத்ததாக, நவ.30 நடைபெற உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com