மத்திய மந்திரி சபையில் 12 புதுமுகங்களுக்கு வாய்ப்பு- பிரதமர் மோடி அதிரடி முடிவு

மத்திய மந்திரி சபையில் இடம் பெறுவார்கள் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்ட சில தலைவர்களுக்கு அதற்கு பதிலாக கட்சி அமைப்பில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on
Summary

மந்திரிசபை மாற்றத்தின் போது இளம் மந்திரிகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய மந்திரி சபையில் தற்போது பிரதமர் மோடி உள்ளிட்ட 69 பேர் இடம் பெற்றுள்ளனர். அரசியலமைப்பு சட்டப்படி அதிகபட்சமாக 81 பேர் வரை மந்திரிகளாக பதவி வகிக்க முடியும். அந்த வகையில் 12 பேரை கூடுதலாக நியமிக்க முடியும்.

மத்திய மந்திரி சபை மாற்றம்

பிரதமர் மோடி கடந்த மே மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவர் இந்தியா திரும்பியவுடன் மத்திய மந்திரி சபை கூட்டத்தை நடத்தினார்.

அப்போதில் இருந்தே மத்திய மந்திரி சபையில் மாற்றம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் உடனடியாக எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. சமீபத்தில் பா.ஜ.க.வின் கட்சி அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது. புதிய தேசிய நிர்வாக குழு அமைக்கப்பட்டது.

அதன் அடிப்படையிலும், 2029 பாராளுமன்ற தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் அடிப்படையில் மத்திய மந்திரி சபையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

12 புதுமுகங்கள்

அதன்படி மத்திய மந்திரி சபையில் காலியாக இருக்கும் 12 இடங்களுக்கு புதுமுகங்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிதாக சேர்க்கப்படுபவர்கள் வயது அடிப்படையில் இடம்பெறலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

2025-ல் மோடி பிரதமராக பதவி ஏற்ற போது 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட மந்திரிகள் 51 முதல் 70 வயதை கொண்டவர்களாகவும், 24 சதவீதம் பேர் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருந்தனர்.

70 வயது

தற்போது 12 மத்திய மந்திரிகள் மற்றும் இணை மந்திரிகள் 70 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த இந்துஸ்தானி அவாம் மோர்சா கட்சியின் ஜிதன்ராவ் மாஞ்சிக்கு 81 வயதாகிறது. மத்திய மந்திரிகளில் இளையவராக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம்மோகன் நாயுடு உள்ளார்.

மந்திரிசபை மாற்றத்தின் போது இளம் மந்திரிகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கூட்டணி கட்சிகள்

மேலும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் இமாச்சல பிரதேசம், கர்நாடகாவை சேர்ந்த எம்.பி.க்கள் மந்திரிகளாக வாய்ப்பு உள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களும் இந்த பட்டியலில் உள்ளதாக தெரிகிறது.

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெற உள்ளது. மந்திரி சபை விரிவாக்கத்தின் போது கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

ஏக்நாத் ஷிண்டேயின் மகன்

மகாராஷ்டிராவில் துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் 13 எம்.பி.க்கள் உள்ளனர். சமீபத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியில் இருந்து சில எம்.பி.க்கள் இணைந்ததை தொடர்ந்து அதன் பலம் அதிகரித்தது. இதனால் ஏக்நாத் ஷிண்டேயின் மகன் ஸ்ரீகாந்துக்கு மத்திய மந்திரியாக வாய்ப்பு உள்ளது.

விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள பஞ்சாபில் ஷிரோன்மணி அகாலி தளம் கட்சிக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம். அந்த கட்சியுடன் மீண்டும் கூட்டணி உருவானால் ஹர்ஷிம்ரத் கவ் பாதல் மீண்டும் மந்திரியாகலாம்.

ஆம்ஆத்மி

ராகவ் சந்தா தலைமையில் 7 மேல்சபை எம்.பி.க்கள் சமீபத்தில் ஆம்ஆத்மியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர். இதனால் அவர்களில் சிலருக்கு மந்திரி சபையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படலாம். இந்த குழுவை சேர்ந்த சந்தீப் பதக் ஏற்கனவே பா.ஜ.க.வில் செயலாளர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேர் உள்ளனர். வேறொரு கட்சியில் இணைந்த இவர்களுக்கும் மத்திய மந்திரி சபையில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய தி.மு.க.வும் மத்திய மந்திரி சபையில் இடம்பெறக்கூடும் என பேச்சுக்கள் உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசியவாத காங்கிரசும், பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து மத்திய மந்திரி சபையில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.

பணிச்சுமை

அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட 14 மத்திய மந்திரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளை கவனித்து வருகின்றனர். மத்திய மந்திரி சபை மாற்றத்தின் போது இந்த பணிச்சுமையை பிரித்து சில துறைகளை புதிய மந்திரிகளுக்கு ஒப்படைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவும் மத்திய மந்திரி சபை விஸ்தரிப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி மந்திரி பதவியில் இருந்து விலகினார். மேல்சபை பதவி காலம் முடிவடைந்தை தொடர்ந்து சிறுபான்மை விவகாரத்துறை இணை மந்திரி ஜார்ஜ் குரியன் பதவி விலகினார். ரெயில்வே இணை மந்திரி ரவ்நீத் சிங் மேல் சபை பதவி காலமும் முடிவடைந்துள்ளது.

நீக்கம்

பா.ஜ.க.வில் புதிய பொறுப்புகளை பெற்றுள்ள மத்திய மந்திரிகளும் மந்திரி பதவியில் இருந்து வெளியேறலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஹர்ஷ் மல்கோத்ரா, பங்கஜ் சவுத்ரி, புதிய பொறுப்புகளை ஏற்று உள்ளனர்.

பெட்ரோலியத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, சமூக நீதி துறை இணை மந்திரி பி.எல்.வர்மா ஆகியோரின் மேல்சபை எம்.பி. பதவி காலமும் நவம்பர் மாதத்தில் முடிவடைகிறது. செயல்பாடுகள் காரணமாகவும் சில மந்திரிகள் நீக்கப்படலாம் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

ஒருவருக்கு ஒரு பதவி

ஒருவருக்கு ஒரு பதவி என்ற நடைமுறையை பா.ஜ.க. பின்பற்றுகிறது. அதன்படி மத்திய மந்திரி சபையில் இடம் பெறுவார்கள் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்ட சில தலைவர்களுக்கு அதற்கு பதிலாக கட்சி அமைப்பில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

அவர்களில் ஸ்மிருதி இரானி, வினோத் தாவ்டே, சதீஷ் பூனியா, தருண் சுக் ஆகியோர் அடங்குவர்.

நிதின்கட்கரி

மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள மூத்த மந்திரிகளில் ஒருவர் நிதின்கட்கரி. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அவர் இளம் தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது என்று தெரிவித்து இருந்தார். இதனால் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம் என்று கருதப்படுகிறது.

புதுமுகங்கள், பெண்கள், கூட்டணி கட்சிகள், தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்கள், கட்சி பொறுப்பு பெற்ற மந்திரிகளை விடுவித்தல், மந்திரிகளின் பணிச்சுமைகளை குறைத்தல் ஆகியவை மத்திய மந்திரி சபை மாற்றத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன்படி மத்திய மந்திரி சபை விரைவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com