யமுனா விரைவுச்சாலையில் தீப்பிடித்து எரிந்த பேருந்து - 9 பேர் உடல் கருகி பலி!

ஓட்டுநர் பீடி பிடித்தது தான் காரணம் என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Fire Accident
Published on
Summary

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் நேற்று நள்ளிரவு 11:30 மணியளவில் பேருந்து ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து உ.பி.யின் மஹோபா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்தில் திடீரென தீப் பிடித்ததில் ஒரு பெண் மற்றும் 8 ஆண்கள் உட்பட மொத்தம் 9 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

விபத்து நடந்த போது பேருந்தில் 30 முதல் 35 பயணிகள் வரை பயணம் செய்துள்ளனர். பேருந்து முழுவதும் சில நிமிடங்களிலேயே தீ பரவியதால், அடர்ந்த புகைக்கு நடுவே பயணிகள் தப்பிக்கப் போராடினர். சிலர் ஓடும் பேருந்திலிருந்து குதித்துத் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக ஏடிஎம் அஜித் சிங் தெரிவித்துள்ளார்.

ஓட்டுநரின் அலட்சியமே காரணம்

இந்த விபத்து தொடர்பாகப் பேருந்தின் ஓட்டுநர் பவன் மற்றும் நடத்துநர் யோகேஷ் ஆகிய இருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். விபத்தில் தப்பிய பயணி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த எஃப்.ஐ.ஆர் நகலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

நொய்டா-ஆக்ரா வழித்தடத்தில் 33-வது கிலோமீட்டர் அருகே பேருந்து சென்றபோது, ஓட்டுநர் அறையிலிருந்து ஏதோ எரியும் வாசனை வந்துள்ளது. பயணிகள் இதுகுறித்து ஓட்டுநரிடம் கூறியபோது, "பேருந்துகளில் இதுபோன்று வாசனை வருவது வழக்கம் தான்" என்று கூறி அவர் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.

புகைபிடித்த ஓட்டுநர்

வாசனையைச் சரிபார்க்கப் பேருந்தை நிறுத்த மறுத்த ஓட்டுநரும் நடத்துநரும், தொடர்ந்து கேபினுக்குள் பீடி/சிகரெட் பிடித்துக் கொண்டு பேருந்தை இயக்கியுள்ளனர். சில நிமிடங்களில் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே தீப்பிழம்பு ஏற்பட்டுள்ளது.

பயணிகள் பேருந்தை நிறுத்தச் சொல்லி அலறியுள்ளனர். ஆனால், ஓட்டுநரும் நடத்துநரும் பேருந்தை நிறுத்த மறுத்து பயணிகளை மிரட்டியுள்ளனர்.

தீ பேருந்து முழுவதும் வேகமாகப் பரவி புகை சூழ்ந்ததும், ஓட்டுநரும் நடத்துநரும் பயணிகளைக் கைவிட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினர்.

தப்பிக்கப் போராடிய பயணிகள்

பேருந்தின் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் கூறும்போது, "நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம். யாரோ தீப்பிடித்துவிட்டது என்று கத்தியதால் விழித்தோம். புகை மூட்டமாக இருந்ததால் வெளியேற வழியில்லை. எப்படியோ தட்டுத்தடுமாறி ஓடி வந்தோம்" என்றார்.

ரிங்கி ராஜ்புத் என்ற பெண் பயணி கூறும்போது, "தீ விபத்து ஏற்பட்டபோது உள்ளே ஒரே நெரிசலாக இருந்தது. மக்கள் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு தப்பிக்க முயன்றனர்.

நான் எனது காலணிகளைக் கூட அணியாமல், வெறும் மொபைலை மட்டும் எடுத்துக் கொண்டு யாரோ இழுத்ததால் உயிர் தப்பினேன். எனக்குப் பின்னால் இருந்த பலரால் வெளியே வர முடியவில்லை" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

பேருந்தில் இருந்த தீயணைப்பு உருளையை பயன்படுத்த முயன்றபோது அது வேலை செய்யவில்லை. பின்னர், அந்த உருளையைக் கொண்டே ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சில பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் நிதியுதவி

இந்தச் துயரச் சம்பவத்திற்கு உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்திரவிட்டுள்ளார்.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com