"பாசம் எப்போதும் நிலைத்திருக்கட்டும்" – பிரதமர் மோடி ரக்ஷா பந்தன் வாழ்த்து!

நம்பிக்கையுடன் மணிக்கட்டில் கட்டப்படும் 'ராகி' கயிறு, பாதுகாப்பின் புனிதமான பிணைப்பாகக் கருதப்படுகிறது.
Raksha Bandhan
Published on
Summary

நாடு முழுவதும் இன்று ரக்ஷா பந்தன் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சகோதர-சகோதரிகளுக்கு இடையேயான அன்பையும், பாதுகாப்பையும் பலப்படுத்தும் இந்த உன்னத நாளில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட நாட்டின் முக்கியத் தலைவர்கள் மக்களுக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பாரம்பரியத்தை நினைவூட்டிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அங்கமாக ரக்ஷா பந்தன் விளங்கி வருகிறது.

நம்பிக்கையுடன் மணிக்கட்டில் கட்டப்படும் 'ராகி' கயிறு, பாதுகாப்பின் புனிதமான பிணைப்பாகக் கருதப்படுகிறது. 'ரக்‌ஷே, மா சலா, மா சலா' என்ற மந்திர வரிகள், இந்த பாதுகாப்பு பிணைப்பு என்றென்றும் தொடர வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.

ஒவ்வொரு உறவும் நம்பிக்கை, உணர்திறன், பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றின் தூண்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை இப்பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது.

குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த இந்த நன்னாளில் நாம் உறுதியேற்போம். 'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) நோக்கிய பயணத்தில் ஆக்கப்பூர்வமான சிந்தனையோடு நாம் முன்னோக்கிச் செல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

"பாசம் எப்போதும் நிலைத்திருக்கட்டும்" – பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ரக்ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இந்த புனிதமான பண்டிகை உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மகிழ்ச்சி, வளம் மற்றும் வெற்றியைக் கொண்டுவரட்டும்.

சகோதரத்துவத்தின் மீதான பாசம், அன்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை என்றென்றும் உடையாத பிணைப்பாக நீடிக்க வேண்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"அன்பின் அடையாளம்" – மத்திய அமைச்சர் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அசைக்க முடியாத அன்பு மற்றும் நம்பிக்கையைப் போற்றும் புனிதமான ரக்ஷா பந்தன் திருநாளில், சக நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த திருவிழா ஒவ்வொருவரின் வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வர பிரார்த்திக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

பள்ளி குழந்தைகளுடன் கொண்டாடிய டெல்லி முதல்வர்

டெல்லி முதல்வர் ரேகா குப்தா, பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தார். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பள்ளி மாணவிகள், முதல்வருக்கு ராகி கயிறுகளைக் கட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து முதல்வர் கூறுகையில், "டெல்லி முழுவதும் உள்ள விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள், 'முக்கியமந்திரி ஜன சேவா சதன்' இல்லத்திற்கு வந்து ராக்கி கயிறுகளைக் கட்டினர். அவர்களின் புன்னகையும், உற்சாகமும், அவர்கள் வெளிப்படுத்திய அன்பும் இந்நிகழ்வை மிகவும் சிறப்பானதாக மாற்றின.

டெல்லியின் வீதிகளிலும் சந்துகளிலும் எண்ணற்ற குழந்தைகள் வளர்கிறார்கள்; அவர்களின் எதிர்காலம் இன்னும் எழுதப்பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது.

இந்த ரக்ஷா பந்தன் நன்னாளில், ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பான குழந்தைப் பருவம், தரமான கல்வி, முறையான சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றைப் பெறுவதையும், முன்னேறுவதற்கான அனைத்து வாய்ப்புகளை கொண்டிருப்பதையும் உறுதி செய்வதே எனது முக்கிய நோக்கமாகும். அனைவருக்கும் ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.

பீகார் 'ஜீவிகா திதி'களுக்கு சூரிய ஒளி மின்சார திட்டம் – முதல்வர் சாம்ராட் சௌத்ரி பரிசு

பீகார் மாநில முதல்வர் சாம்ராட் சௌத்ரி, ரக்ஷா பந்தனை முன்னிட்டு அம்மாநிலத்தைச் சேர்ந்த 'ஜீவிகா திதி'களுக்கு (சுயஉதவிக் குழுப் பெண்கள்) சூரிய ஒளி மின்சார திட்டம் என்ற சிறப்பான பரிசை அறிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ரக்ஷா பந்தன் எனும் இந்த நன்னாளில், என் சகோதரிகள் அன்போடும் ஆசிகளோடும் ரக்ஷியைக் கட்டியுள்ளனர். நமது சகோதரிகள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் ஆனந்தம் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com