வேலையை முடித்துவிட்டு சம்பளம் வாங்குங்கள் - மும்பை மாநகராட்சி ஆணையருக்கு அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்!

டிசம்பர் 1 வரை நீங்கள் சம்பளம் வாங்க முடியாது. அதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, உங்கள் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் - நீதிபதி ஜோய்மால்யா பாக்சி
Ashwini Bhide
Published on: 
Summary

அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறியதற்காக, மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே மற்றும் இதர உயர் அதிகாரிகளின் நவம்பர் மாத சம்பளத்தை உடனடியாக முடக்குமாறு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையையும் நீதிமன்றம் தொடங்கியுள்ளது.

போரிவலி பேருந்து நிலைய விவகாரம் என்ன?

மும்பை போரிவலி பகுதியில் 'பெஸ்ட்' பொதுப் பேருந்து நிலையம் அமைப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நிலம் ஒதுக்கப்பட்டது. இது தொடர்பாக Private Developer ஒருவருக்கும் மாநகராட்சிக்கும் இடையே நீண்ட நாட்களாக நீதிமன்ற வழக்கு நடந்து வந்தது.

கடந்த 2025 ஆகஸ்ட் மாதம், இந்த நிலத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களுக்குள் அகற்றி பேருந்து நிலையத்தை முழுமையாகச் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், 2025 நவம்பர் கடந்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், உச்ச நீதிமன்றம் மாநகராட்சி அதிகாரிகள் மீது கடும் அதிருப்தி அடைந்தது.

30 நாட்கள் அவகாசம் மறுப்பு – ரூ. 5 லட்சம் அபராதம்

தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, வ. மோகனா ஆகியோர் அடங்கிய 3 அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற மேலும் 30 நாட்கள் அவகாசம் கேட்ட மும்பை மாநகராட்சியின் கோரிக்கையை நீதிபதிகள் திட்டவட்டமாக நிராகரித்தனர். அத்துடன் மாநகராட்சிக்கு ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்தனர்.

"நாங்கள் ஒரு நாள் கூட அவகாசம் தர முடியாது. அதிகாரிகள் நள்ளிரவில் உட்கார்ந்து வேலை செய்தாவது உத்தரவை அமல்படுத்தட்டும். அப்போதுதான் எப்படி வேலை செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும்," என தலைமை நீதிபதி சூர்யகாந்த் காட்டமாகத் தெரிவித்தார்.

ஆக்கிரமிப்பாளர்களுடன் அதிகாரிகள் கூட்டு?

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் தாமதப்படுத்துவது, அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுடன் கூட்டு வைத்துள்ளதையே காட்டுகிறது என்று நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.

'இது உச்ச நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறும் செயலாகும். சம்பந்தப்பட்ட அதிகாரியை நாங்கள் சிறைக்கு அனுப்புவோம், அப்போதுதான் உச்ச நீதிமன்ற உத்தரவின் புனிதத்தன்மை அவருக்குப் புரியும்' என்று தலைமை நீதிபதி எச்சரித்துள்ளார்.

மராத்தி மொழிப் சாக்குப்போக்கு நிராகரிப்பு!

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்னதாக, உள்ளூர் அதிகாரிகளுக்கு மராத்தி ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியிருந்ததால் தாமதம் ஏற்பட்டது என BMC தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக்கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதி ஜோய்மால்யா பாக்சி, இந்த மனுவைத் தாக்கல் செய்த அதிகாரியின் பெயர் 'டாக்டர் தம்பே' என்று சுட்டிக்காட்டி, "மனு தாக்கல் செய்த அதிகாரியின் பெயரே தம்பே என்று இருக்கும்போது, அவர்களுக்கு மராத்தி மொழி தெரியாது என்று எங்களை நம்பச் சொல்கிறீர்களா?" என சாடினார்.

"வேலையை முடித்துவிட்டு சம்பளத்தை வாங்குங்கள்!"

நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸிற்கு முறையான விளக்கம் அளித்து, நீதிமன்ற உத்தரவு முழுமையாகச் செயல்படுத்தப்படும் வரை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குச் சம்பளம் வழங்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதி ஜோய்மால்யா பாக்சி கூறுகையில், "டிசம்பர் 1 வரை நீங்கள் சம்பளம் வாங்க முடியாது. அதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, இங்கு வந்து உங்கள் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்," என அதிரடியாகக் கூறினார்.

நீதிமன்ற உத்தரவுகளை அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை அமைந்துள்ளது.

X