

நவம்பர் 19 அன்று வெளியாக உள்ள GTA 6 வீடியோ கேமை விளையாட இந்திய நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது.
ChairsCarte எனும் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்தியாவை சேர்ந்த இன்டீரியர் டிசைனிங் நிறுவனமான 'INDE' தனது ஊழியர்களுக்கு புதிதாக வெளியாக உள்ள GTA 6 வீடியோ கேமை விளையாட ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்துள்ளது.
நவம்பர் 19 அன்று GTA 6 வெளியாக உள்ள நிலையில் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் என அனைவர்க்கும் விடுமுறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிஷோர் சண்முகம், "நாங்கள் 'வைஸ் சிட்டி', 'ஜிடிஏ வி' என யதார்த்தத்தையே மறையச் செய்யும் 'ராக்ஸ்டார்' உலகங்களுடன் வளர்ந்தோம்.
13 ஆண்டுகள் ஆகிவிட்டன, எனவே GTA 6 இறுதியாக வரும்போது, நாங்கள் அதை மற்றுமொரு சாதாரண வியாழக்கிழமையாக கருதப் போவதில்லை! அன்று நிறுவனமே அதிகாரப்பூர்வமாக விடுமுறை எடுக்கிறது!" என தெரிவித்தார்.
இந்த பதிவு வைரலான நிலையில் சமூக ஊடகப் பயனர்கள் தங்கள் ஊழியர்களை நிறுவனம் அக்கறையுடன் கவனித்து வருவதைப் பாராட்டினர்.
அதேவேளையில், சிலர் அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர விரும்புவதாக நகைச்சுவையாக குறிப்பிட்டனர்.
GTA 6 விளையாட இந்தியாவில் ஒரு நிறுவனம் விடுமுறை விடும் அதே வேளையில் உலகளவிலும் பல நிறுவனங்கள் GTA 6 விளையாட விடுமுறையை அறிவித்துள்ளன.
கடந்த வாரம், கணினி சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனமான லாஜிடெக், தனது 7,000 உலகளாவிய ஊழியர்களுக்கு GTA 6 விளையாடுவதற்காக ஒரு நாள் விடுமுறை அளிப்பதாக அறிவித்தது.
அமெரிக்க ராணுவம், நவம்பர் 19 அன்று வெளியாகவிருக்கும் GTA 6 விளையாடுவதற்காக, பணியில் உள்ள வீரர்களுக்கு நான்கு நாள் அனுமதிச் சீட்டை வழங்கியது.
இதேபோல், கலிபோர்னியாவை சேர்ந்த பர்கர் மோட்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், நவம்பர் 19 அன்று ஒரு நாள் மட்டும் தங்கள் செயல்பாடுகளை இடைநிறுத்துவதாக அறிவித்தது.