2036-க்குள் செல்வந்த நுகர்வோரின் எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்குத் தள்ளுகிறது இந்தியா!

அமெரிக்கா 23.1 கோடி செல்வந்த நுகர்வோர்களுடன் சர்வதேச அளவில் முதலிடத்தில் தொடரும்.
 wealthy consumers china
Published on

2036-ஆம் ஆண்டிற்குள் அதிக நுகர்வு திறன் கொண்ட செல்வந்த நுகர்வோரின் எண்ணிக்கையில் இந்தியா சீனாவை விட முந்திச் செல்லும் என்று NielsenIQ மற்றும் World Data Lab இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் இந்திய நுகர்வோரின் பங்கு மிக முக்கியமான நிலையை எட்டும் என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

எண்ணிக்கை உயர்வு

தற்போது 2026-ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 2.6 கோடி செல்வந்த நுகர்வோர்கள் உள்ள நிலையில், அடுத்த பத்து ஆண்டுகளில் இது 8.2 கோடி அதிகரித்து 10.8 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே காலகட்டத்தில் சீனாவின் செல்வந்த நுகர்வோர் எண்ணிக்கை 6.2 கோடி உயர்ந்து 10.3 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சர்வதேச அளவில் அதிக அளவிலான புதிய செல்வந்த நுகர்வோர்களை சேர்க்கும் நாடாக இந்தியா உருவெடுக்கிறது. இருப்பினும், அமெரிக்கா 23.1 கோடி செல்வந்த நுகர்வோர்களுடன் சர்வதேச அளவில் முதலிடத்தில் தொடரும்.

நுகர்வோர் வரம்பு

இந்த அறிக்கையின்படி, ஒரு நாளைக்கு 90 டாலருக்கும் அதிகமாகச் செலவழிப்பவர்கள் 'செல்வந்த நுகர்வோர்' என்று வரையறுக்கப்படுகிறார்கள். இது நபர்களின் வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாமல், அவர்களின் தினசரி நுகர்வு திறனை அடிப்படையாகக் கொண்ட அளவீடாகும். மேலும், ஒரு நாளைக்கு 13 டாலர் முதல் 90 டாலர் வரை செலவிடும் "மைய நுகர்வோர்கள்" இந்தியாவில் 2026-இல் 64.9 கோடியாக உள்ளனர்.

உலகளவில் 2036-க்குள் செல்வந்த நுகர்வோரின் மொத்த எண்ணிக்கை 102.5 கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், இந்த உயர் நுகர்வுப் பிரிவு பொருளாதாரத்தில் மிகப்பெரிய செலவுத் திறனைக் கட்டுப்படுத்துகிறது.

சந்தையின் புதிய மாற்றங்கள்

நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை உயர்வு காரணமாக இந்தியாவை ஒரு "அளவு சார்ந்த வளர்ச்சி" கொண்ட சந்தையாக இந்த அறிக்கை வகைப்படுத்துகிறது. நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்து வருவதால், நிறுவனங்கள் தரமான, சொகுசான மற்றும் மதிப்புமிக்க பொருட்களை சந்தையில் அறிமுகப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com