3 நாடுகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய எனக்கே இந்த நிலைமை என்றால்.. SIR செயல்பாடு குறித்து முன்னாள் தூதர் வேதனை

வாக்காளர் பட்டியல் பதிவுகளுடன் பொருந்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ்தீப் சூரி
நவ்தீப் சூரி
Published on

3 ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் (SIR) பஞ்சாப், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில் பஞ்சாபில் எஸ்ஐஆர் நடவடிக்கையில் தனது இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பதில் தனக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்து ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இந்தியாவின் முன்னாள் தூதரான நவ்தீப் சூரி வேதனை தெரிவித்துள்ளார்.

பதிவு

இதுகுறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் தெளிவு இல்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது பதிவில், " பஞ்சாபில் எஸ்ஐஆர் செயல்முறையில் வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் எனது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை சமர்ப்பித்தேன்.

அப்போது அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பதாகவே கூறப்பட்டுள்ளது.

பின்னர், தன்னார்வலர் ஒருவரிடமிருந்து வந்த தகவலில், அவரது விவரங்கள் 2003ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் பதிவுகளுடன் பொருந்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் பேசிய போது, இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறினர்.

2003 ஆம் ஆண்டில் பணி நிமித்தமாக இந்தியாவில் இல்லை எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, குடியுரிமைக்கான சான்றாகக் கடவுச்சீட்டை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் கேட்டனர்.

வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதாரைத் தவிர வேறு ஆவணங்கள் என்னிடம் உள்ளன.

ஆனால் ஒன்றை மட்டும் கேட்கத் தோன்றுகிறது.

மூன்று நாடுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிறகும், எனது குடியுரிமையை நிரூபிக்க நான் போராட வேண்டி இருந்தால், நாட்டின் சாதாரணக் குடிமகனின் நிலை என்னவாகும்? இதுதான் 'வாழ்வை எளிதாக்கும்' முறையா?" என்று பதிவிட்டுள்ளார்.

விதி

எஸ்ஐஆர் விதிகளின்படி, 2002 அல்லது 2003ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் இல்லாத வாக்காளர்கள், அப்போதைய பழைய பதிவுகளுடன் தங்களை இணைத்துக் காட்டும் ஆவணங்களை வழங்க வேண்டும்.

முன்னதாக தேர்தல் ஆணையம் 11 ஆவணங்களை மட்டுமே அனுமதித்த நிலையில், உச்ச நீதிமன்ற கெடுபிடிக்கு பின்னர் ஆதார் அட்டையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com