80-ஆவது சுதந்திர தினம்: செங்கோட்டையில் இருந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி!

பிரதான நிகழ்ச்சி செங்கோட்டை வளாகத்தில் நடைபெறும், பிரதமர் மோடி கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குவார்.
Red Fort
Published on

இந்தியாவின் 80-ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தேசபக்தி உணர்வு மற்றும் பல அடுக்கு பாதுகாப்புக்கு மத்தியில், செங்கோட்டை வளாகத்தில் நடைபெறும் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளார். செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது, ​​முதல் முறையாக 'வந்தே மாதரம்' தேசிய கீதம் இசைக்கப்படவுள்ளது.

மாநில தலைநகரங்களிலும், நாடு முழுவதும் உள்ள பிற நகரங்கள் மற்றும் ஊர்களிலும் விழா நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கொடியேற்றம் மற்றும் அதைத் தொடர்ந்த கலாச்சார நிகழ்ச்சிகள் அடங்கும். பிரதான நிகழ்ச்சி செங்கோட்டை வளாகத்தில் நடைபெறும், மேலும் பிரதமர் மோடி கொண்டாட்டங்களுக்குத் தலைமை தாங்குவார்.

வந்தே மாதரம் 150 ஆண்டுகள்:

150 ஆண்டுகள் பாம்பரியம் மிக்க 'வந்தே மாதரம்' கீதத்தை நினைவுகூரும் வகையிலும், "2047-ஆம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் என்ற இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தை முன்னெடுத்து செல்வதில் 'யுவ சக்தி'யின் ஆற்றல் மற்றும் முக்கிய பங்களிப்பை கொண்டாடும் வகையிலும்" இந்த மாபெரும் விழா நடைபெற உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

செங்கோட்டைக்கு பிரதமர் மோடி வந்தடையும் போது, ​​அவரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், துணை அமைச்சர் சஞ்சய் சேத் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் வரவேற்பார்கள். பாதுகாப்பு செயலாளர், டெல்லி பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் சேத்தியை பிரதமருக்கு அறிமுகம் செய்வார்.

பின்னர், தளபதி பிரதமரை மரியாதை செலுத்தும் தளத்திற்கு அழைத்துச் செல்வார். அங்கு, முப்படைகள் மற்றும் டெல்லி காவல்துறையின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படையினர் பிரதமர் மோடிக்கு பொது மரியாதை செலுத்துவார்கள். அதன்பிறகு, பிரதமர் மரியாதை காவலர்களை ஆய்வு செய்வார் என்று அமைச்சகம் முன்னதாக ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

தேசிய கொடியேற்றம்:

மரியாதை அணிவகுப்பை ஆய்வு செய்த பின்னர், பிரதமர் செங்கோட்டையின் கொத்தளங்களுக்குச் செல்வார். தேசியக் கொடியை ஏற்றுவதற்காக, டெல்லி பகுதி தளபதி பிரதமரை கொத்தளங்களில் உள்ள மேடைக்கு அழைத்துச் செல்வார்.

"தேசியக் கொடியை ஏற்றுவதில் கேப்டன் சோனியா சிங் சௌஹான் பிரதமருக்கு உதவுவார். இது, 1721 ஃபீல்ட் பேட்டரி (செரிமோனியல்) பிரிவின் வீரமிக்க பீரங்கி வீரர்களின் 21 குண்டுகள் முழங்கும் மரியாதையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுவிடும்," என அந்த அறிக்கை தெரிவித்தது.

ராஷ்ட்ரிய வணக்கம்:

மூவர்ணக் கொடி ஏற்றப்பட்ட பிறகு, அதற்கு 'ராஷ்ட்ரிய வணக்கம்' செலுத்தப்படும். பிரதமர் தேசியக் கொடியை ஏற்றியவுடன், இந்திய விமானப்படையின் இரண்டு எம்.ஐ.17 ஹெலிகாப்டர்கள் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மலர் இதழ்கள் தூவப்படும். அவற்றில் ஒன்று தேசிய கொடியை ஏந்தியபடியும், மற்றொன்று 'வந்தே மாதரம்' சித்தரிக்கப்பட்ட கொடியை ஏந்தியபடியும் செல்லும்.

அந்த ஹெலிகாப்டர்களின் தலைவர்களாக விங் கமாண்டர் ரஜத் மற்றும் ஸ்குவாட்ரன் லீடர் அங்கித் வர்ஷ்னி ஆகியோர் இருப்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலர் இதழ்கள் தூவிய பிறகு, பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அவரது உரையின் முடிவில், 2,500 தேசிய மாணவர் படை (NCC) மாணவர்களும், மை பாரத் தன்னார்வலர்களும் இணைந்து 'வந்தே மாதரம்' என்ற தேசியப் பாடலையும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாடுவார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com