புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு: 1,364 மருந்துகளுக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலை அமலுக்கு வந்தது

இதன் மூலமாக விலை உயர்ந்த புற்றுநோய் மருந்துகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எளிதில் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
  Cancer drugs
Published on: 
Summary

மத்திய அரசின் புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு நடவடிக்கை புற்றுநோய் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ளது.

புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் மருந்துகளின் விலையை வெகுவாகக் குறைக்கும் வகையில், திருத்தப்பட்ட புதிய அதிகபட்ச சில்லறை விலைகள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம் நுகர்வோருக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.3,540.38 கோடி வரை பெருமளவிலான நிதி சேமிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை புற்றுநோய் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ளது.

மத்திய மருந்துகள் துறையின் கீழ் இயங்கும் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம், சுகாதார சேவைகள் இயக்ககம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் புற்றுநோய் மருந்துகளின் வர்த்தக விளிம்பு விலையை வரம்புபடுத்தியுள்ளது. இதன்படி, மொத்தம் 121 மருந்துகளின் கீழ் வரும் 1,364 புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைகள் கடந்த திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. நாடு முழுவதும் உள்ள 85 முன்னணி மருந்து நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளுக்கான திருத்தப்பட்ட விலைப் பட்டியலை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளன.

கணிசமாக குறைந்த மருந்துகளின் விலை

இந்த விலை குறைப்பின் மூலம் கிட்டத்தட்ட 679 மருந்து வகைகளின் விலை 50 சதவீதத்திற்கும் மேலாகக் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சில குறிப்பிட்ட மருந்துகளின் விலைகள் அதிகபட்சமாக 96.45 சதவீதம் வரை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக விலை உயர்ந்த புற்றுநோய் மருந்துகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எளிதில் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை

அரசாங்கம் அறிவித்துள்ள திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலாக எந்தவொரு மருந்துக்கடையும் அல்லது மருத்துவமனைக் கடைகளும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் தாங்கள் வாங்கும் மருந்துகளின் சரியான விலையை அதன் மீது அச்சிடப்பட்டுள்ள புதிய சில்லறை விலை மூலமாகவோ அல்லது 'பார்மா சஹி தாம்' மொபைல் செயலி மூலமாகவும், தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாகவும் சரிபார்த்துக் கொள்ளலாம்.

ஒருவேளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலித்தால் அல்லது விலை தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால், 'பார்மா ஜன் சமாதான்' இணையதளம் மூலமாகவோ அல்லது 1800-111-255 என்ற இலவச உதவி எண்களைத் தொடர்பு கொண்டோ பொதுமக்கள் தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

X