'ராமாயணா' படத்தால் மீண்டும் பேசப்படும் ஜடாயு: கேரளாவுக்கு வர சுற்றுலாப் பயணிகளுக்கு முதலமைச்சர் வி.டி.சதிசன் அழைப்பு

கேரளாவின் கொல்லம் மாவட்டம் ஜடாயுமங்கலம் பகுதியில் அமைந்துள்ள 'ஜடாயு எர்த் சென்டர்', சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய தலமாக விளங்கி வருகிறது.
 V.D.Satheesan
Published on: 
Summary

கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற 'ஜடாயு பாறை' சிலையை பார்வையிட வருமாறு கேரள முதலமைச்சர் வி.டி.சதிசன் அகில இந்திய அளவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ராமாயணா' திரைப்படத்தின் தாக்கத்தால், ராமகாவியத்தில் வரும் ஜடாயுவின் கதாபாத்திரம் இந்தியா முழுவதும் மீண்டும் பேசபொருளாகியுள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற 'ஜடாயு பாறை' சிலையை பார்வையிட வருமாறு கேரள முதலமைச்சர் வி.டி.சதிசன் அகில இந்திய அளவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ரன்பீர் கபூர், யஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான பான்-இந்தியா திரைப்படமான 'ராமாயணா', பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீதையை மீட்கும் முயற்சியில் ராவணனுடன் போரிட்டு தன் இன்னுயிர் ஈந்த ஜடாயுவின் தியாகத்தை இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படத்தைக் கண்டுகளித்த பலரும், ஜடாயுவின் புகழும் அதன் வரலாறும் கேரளாவில்தான் இன்னும் நிலைத்து நிற்கிறது என்பதை அறிந்து பெருமிதம் கொள்வதாக முதலமைச்சர் சதிசன் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கொல்லம் ஜடாயு சிறப்புகள்

கேரளாவின் கொல்லம் மாவட்டம் ஜடாயுமங்கலம் பகுதியில் அமைந்துள்ள 'ஜடாயு எர்த் சென்டர்', சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய தலமாக விளங்கி வருகிறது. இங்கு மலையின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஜடாயு சிற்பம், கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய பறவைச் சிற்பமாகும். நீதிக்கும் பெண்ணின் கவுரவத்திற்கும் தன் உயிரைக் கொடுத்த ஜடாயுவின் நினைவாக உருவாக்கப்பட்ட இந்தச் சிற்பம், தைரியம் மற்றும் தியாகத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.

திரைப்படத்தின் மூலம் ஜடாயுவின் வரலாறு பரவலாகச் சென்று சேர்ந்துள்ள நிலையில், இந்தச் சுற்றுலாத் தலத்தை நேரில் வந்து அனுபவிக்குமாறு முதலமைச்சர் வி.டி.சதிசன் விடுத்துள்ள அழைப்பு மாநிலத்தின் சுற்றுலாத்துறையை மேலும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "கடவுளின் சொந்த நாடான கேரளாவுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்" என்று அவர் தனது அழைப்பில் குறிப்பிட்டுள்ளார்.

X