

டெல்லியில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்து, பத்து வயது சிறுவன் ஒருவனின் மார்பில் பட்டதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
டெல்லியில் உள்ள நரேலா பகுதியில் நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது.
அப்போது ரிஷி என்ற பத்து வயது சிறுவன், வானவெடியை பற்றவைத்த போது, அது மேலே வானத்தை நோக்கி செல்லாமல், சிறுவனின் மார்பில் பட்டுள்ளது.
இதையடுத்து படுகாயத்துடன் மயக்கமடைந்த சிறுவனை, குடும்பத்தினர்கள் அருகிலுள்ள சத்யவாடி ராஜா ஹரிஷ் சந்திரா மருத்துவானைக்கு கொண்டு சென்றனர்.
இதைத்தொடர்ந்து சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மருத்துவமனையின் அலட்சியம் காரணமாகவே தங்கள் குழந்தை உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தார்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த சிறுவனின் மூத்த சகோதரன் கூறுகையில், “அவசர சிகிச்சைக்காக எனது தம்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளிக்கவில்லை.
மருத்துவர்கள் மெதுவாக நடந்து வந்து, எனது தம்பியின் மார்பை மட்டும் அழுத்தி பார்த்தார்கள்.
மேலும் சிகிச்சைக்காக எனது தம்பியை மருத்துவமனைக்கு கொண்டுவந்த போது, அவன் உயிருடன் தான் இருந்தான்” என்று கூறினான்.
இதையடுத்து சிறுவனின் இறப்பு குறித்து அவனின் தாயார் கூறுகையில், “எனது மகன் பட்டாசுகளை வெடித்து கொண்டிருந்த போது, ஒன்று பின்னால் இருந்து வந்து அவன் மார்பின் மீது விழுந்தது.
உடனே அவன் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டதால், நாங்கள் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம், ஆனால் அவர்கள் எனது மகனுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை” என கூறினார்.
டெல்லியில் நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின் போது, பட்டாசு விபத்தால் பாதிக்கப்பட்டு 214 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
மேலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை அதிகபட்சமாக 85 பேர் பாதிப்புக்கு உள்ளானதாகவும், இரவு 10 மணிக்கு மேல் சுமார் 61 பேர் வெடி விபத்தால் பாதிக்கப்பட்டதாகவும் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.