இந்தியாவுக்கு முதல் படி.. விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த GSLV-F17 ராக்கெட் - பிரதமர் மோடி பெருமிதம்

நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான முக்கிய தரவுகளை வழங்கும்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on
Summary

GSLV-F17 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது பற்றி பிரதமர் மோடி பெருமிதம் பொங்க எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05-ஐ சுமந்து சென்ற GSLV-F17 ராக்கெட், இன்று (வெள்ளிக்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பிரதமர் மோடி பெருமிதம்

இதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"இஸ்ரோவின் மற்றொரு வியக்கத்தக்க சாதனை இது. நாட்டிற்கு பெருமை சேர்க்கும் மற்றொரு தருணமிது.

EOS-05-ஐ சுமந்து சென்ற GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

புவி-ஒத்திசைவு சுற்றுப்பாதையில் இருந்து செயல்படும் இந்தியாவின் முதல் படமெடுக்கும் செயற்கைக்கோளான EOS-05ஐ சுமந்து GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது இந்திய விண்வெளித் துறையின் வளர்ந்துவரும் செயல்திறனை வரையறுக்கும் புத்தாக்கமான மற்றும் பாராட்டத்தக்க விஷயம்.

இஸ்ரோ மற்றும் இந்திய தொழில்துறைக்கு இடையே வளர்ந்து வரும் கூட்டாண்மை, நமது விண்வெளித் திட்டத்திற்கு புதிய பலத்தை சேர்ப்பதுடன், ஒட்டுமொத்த விண்வெளி ஈக்கோ-சிஸ்டத்தில் இந்தியாவின் திறன்களை விரிவுபடுத்துகிறது." என தெரிவித்துள்ளார்.

முதல் இமேஜிங் செயற்கைக்கோள்

EOS-05-ஐ சுமந்து சென்ற GSLV-F17 ராக்கெட் சென்னையில் இருந்து சுமார் 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

இந்திய துணைக்கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் செயல்பட உள்ளதால் மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்டரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் மூலம் இந்தியாவின் நிலப்பரப்பை தொடர்ந்து கண்காணித்து நிகழ்காலத்துக்கு நெருக்கமான புகைப்படங்களை வழங்கும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எல்லைப் பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான முக்கிய தரவுகளை வழங்கும். இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவை கண்காணிக்கும் நாட்டின் முதல் இமேஜிங் செயற்கைக்கோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com