புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

நிகழ்காலத்துக்கு நெருக்கமான புகைப்படங்களை வழங்கும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
GSLV F17
Published on

இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05-ஐ சுமந்து சென்ற GSLV ராக்கெட், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலைக்கு முந்தைய நேரத்தில் விண்ணில் ஏவப்பட்டது.

சென்னையில் இருந்து சுமார் 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, 51.7 மீட்டர் உயரமுள்ள GSLV-F17 ராக்கெட், முன்னரே திட்டமிடப்பட்டபடி அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் பாய்ந்தது; மழையையும் பொருட்படுத்தாமல் ராக்கெட் கிளம்பியபோது அது இருண்ட வானத்தை ஒளிரச் செய்தது.

படமெடுக்கும் செயற்கைக்கோள்:

அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த புவி கண்காணிப்பு விண்கலம், புவி-ஒத்திசைவு சுற்றுப்பாதையில் இருந்து செயல்படும் இந்தியாவின் முதல் படமெடுக்கும் செயற்கைக்கோளாக அமையும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

புதன்கிழமை இரவு 11.30 மணிக்கு தொடங்கப்பட்ட 27 மணி நேர 'கவுண்ட்டவுன்' நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

முதல் இமேஜிங் செயற்கைக்கோள்:

இந்திய துணைக்கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் செயல்பட உள்ளதால் மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்டரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் மூலம் இந்தியாவின் நிலப்பரப்பை தொடர்ந்து கண்காணித்து நிகழ்காலத்துக்கு நெருக்கமான புகைப்படங்களை வழங்கும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எல்லைப் பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான முக்கிய தரவுகளை வழங்கும். இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவை கண்காணிக்கும் நாட்டின் முதல் இமேஜிங் செயற்கைக்கோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com