

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
அதன்படி இருநாடுகளும் 2030ம் ஆண்டுக்குள் 5 பில்லியன் டாலர் வர்த்தகம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளன. மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு, விரிவான உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் புதிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படவுள்ளது. தற்போதுள்ள கூட்டுக் குழு செயலாளர் மட்டத்திலிருந்து அமைச்சர் மட்டத்திற்கு தரம் உயர்த்தப்படும்.
இந்தியாவின் அணுமின் உற்பத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உஸ்பெகிஸ்தானில் இருந்து நீண்ட கால அடிப்படையில் யுரேனியம் இறக்குமதி செய்ய வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தருவாயில் இருக்கின்றன என்று வெளியுறவு அமைச்சகத்தின் மேற்குப் பிராந்தியச் செயலாளர் சிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவின் யு.பி.ஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை உஸ்பெகிஸ்தானிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
தங்கம், தாமிரம், யுரேனியம் மற்றும் அரிய வகை பூமி கனிமங்கள் உள்ளிட்ட சுரங்கம் மற்றும் கனிம வளங்கள் பிரிவில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி பாதுகாப்பு, ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம், மருந்துகள், சுகாதாரம், விவசாயம், சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.