மன்மோகன் சிங் மீதான மோடியின் விமர்சனம்: அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை சந்தித்ததாக பிரதமர் மோடி கூறியிருந்தது மாநிலங்களவையில் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தியது.
மன்மோகன் சிங் மீதான மோடியின் விமர்சனம்: அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், நிலுவையில் உள்ள சில மசோதாக்களையும் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

கூட்டம் தொடங்கிய அன்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்ட பின்னர், அவையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

மாநிலங்களவை தொடங்கியதும் குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி, பாகிஸ்தான் அதிகாரிகளுடன் மன்மோகன் சிங் சந்தித்தாக கூறப்பட்டது குறித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், சபாநாயகர் வெங்கையா நாயுடு அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால், கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து, பேசிய அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன், ஒக்கி புயலால் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

அப்போது, சரத்யாதவ் தகுதி நீக்கம் தொடர்பாக சில உறுப்பினர்களும் பேச முயற்சித்ததால் மீண்டும் குழப்பம் நிலவியது. இதனையடுத்து, அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் அறிவித்தார். இந்நிலையில், இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் அவை கூடியது.

துணை சபாநாயகர் பி.ஜே குரியன் அவையை வழிநடத்தினார். அவை தொடங்கியதுமே காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா, மன்மோகன் சிங் மீதான மோடியின் குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், துணை சபாநாயகர் அதை அனுமதிக்கவில்லை.

இது தொடர்பான நோட்டீஸை சபாநாயகர் வெங்கையா நாயுடு நிராகரித்து விட்டதாகவும், இது குறித்து விவாதிக்க முடியாது என்றும் அவர் கூறினார். இதனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால், நாள் முழுவதும் அவையை துணை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com