மருந்தீஸ்வரர் கோவிலில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன திருமண மண்டபம் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன திருமண மண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
நவீன திருமண மண்டபத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தபோது எடுத்தபடம்.
நவீன திருமண மண்டபத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தபோது எடுத்தபடம்.
Published on

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை மாவட்டம், திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.20 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன திருமண மண்டபத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இது 84,592 சதுர அடி பரப்பளவு உடையது. 1,388 இருக்கைகள் கொண்ட திருமண கூடம், 552 இருக்கைகள் கொண்ட உணவருந்தும் கூடம், குடிநீர், கழிப்பறை, வாகனங்கள் நிறுத்தும் இடம் என அனைத்து வசதிகளுடன் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையில், காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 59 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) விக்ரம் கபூர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் உள்ள 53 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மெக்கானிக் மோட்டார் வாகனம் தொழிற்பிரிவில் பயிலும் பயிற்சியாளர்களுக்கு மின்சார வாகனங்களை இயக்குவதற்கும், பழுது நீக்குவதற்கும் பயிற்சியளிக்க ஏதுவாக ரூ.5 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டிலான 53 மின்சார வாகனங்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின், வேலைவாய்ப்பு பிரிவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்‘ மூலமாக தனியார் துறை நிறுவனங்களால் பணிக்கு தெரிவு செய்யப்பட்ட 238 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, இணையவழியாக 6 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, நிலோபர் கபில், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனர் வி.விஷ்ணு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com