இறக்குமதி மணல் விற்பனை நிபந்தனைகளை தளர்த்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

இறக்குமதி மணல் விற்பனை நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இறக்குமதி மணல் விற்பனை நிபந்தனைகளை தளர்த்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மணலுக்கு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், உயர்நீதிமன்றம் தலையிட்ட பிறகு, மணல் இறக்குமதிக்கு அனுமதி வழங்கும் வகையில் புதிய அரசாணையை வெளியிட்டிருக்கிறது.

ஆனால், அந்த அரசாணையில் விதிக்கப்பட்டுள்ள 11 நிபந்தனைகள், இறக்குமதி செய்யப்பட்ட மணல், ‘கட்டுமானத் தொழிலுக்கும் தேவைப்படும் மக்களுக்கும்’ உரியமுறையில் சென்று சேருமா என்ற நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறது.

இறக்குமதி தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள கடும் நிபந்தனைகள் இறக்குமதி மணலின் நோக்கத்தையே பாழ்படுத்தி, செயற்கையாக ஒரு மணல் தட்டுப்பாட்டை உருவாக்கி, மீண்டும் ஊழலுக்கு வழி வகுக்கத் திட்டமிடப்பட்டு இருப்பதாகவே தெரிகிறது.

எந்தவித உரிமையும் இல்லாமல் ஒரு நிறுவனம் எப்படி மணலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியும் என்ற கேள்வியை, இந்த நிபந்தனைகளை விதித்தவர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொண்டதாகவே தெரியவில்லை.

தமிழகத்தில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்கு முழுமையாக உதவும் வகையில், இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கு தளர்வான நிபந்தனைகளை விதித்து, இறக்குமதி மணல் குறித்த உயர்நீதிமன்ற உத்தரவின் உண்மை நோக்கத்தைப் புரிந்து அ.தி.மு.க. அரசும் குறிப்பாக பொதுப் பணித்துறையை தன்னிடம் வைத்திருக்கும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com