இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவம் குவிப்பு: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

இலங்கையில் அமைந்துள்ள ராஜபக்சே குழுமத்தின் புதிய அரசில், தமிழர்களுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி குறித்து மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Published on

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பட்ட காலிலேயே படும் என்பதற்கொப்ப, படமுடியாது இனி துயரம் பட்டதெல்லாம் போதும் என்று, துன்ப துயரங்கள் அனைத்தையும் அனுபவித்துச் சோர்ந்து போயிருக்கும் ஈழத் தமிழர்களை மேலும் அச்சுறுத்திச் செயலிழக்கச் செய்திடும் எண்ணத்துடன், எடுத்த எடுப்பிலேயே,

‘இலங்கையில் தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் இனிமேல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள்’ என்று அறிவித்துள்ளதற்கும்; தமிழர் பகுதிகளில் உள்ள தெருக்களின் தமிழ்ப் பெயர்களை அழிப்பதற்கும்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் ராஜபக்சே ஆகியோர் பதவிப் பொறுப்பேற்ற ஈரம் காய்வதற்குள், தமிழர்களின் இதயங்களைக் காயப்படுத்தி அவர்களின் கண்ணியத்தைக் குறைக்கும் பணி வேகமாகத் துவங்கி விட்டதும், இந்தியாவின் அப்பாவி மீனவர்களின் மீதான தாக்குதல் அதிகரித்து இருப்பதுமான அநியாயம், உலகத் தமிழர் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கையில் தேர்தல் முடிந்தவுடன், தமக்கு வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என வேறுபடுத்திப் பார்க்காமல் அனைவரிடத்தும் சமமாக நடந்து கொள்வேன் என கோத்தபய அளித்த வாக்குறுதியை நினைவு கூர்ந்திடக் கேட்டுக் கொள்கிறேன்.

பிரதமர் மோடி ஈழத்தமிழர் பிரச்சனையை கோத்தபய ராஜபக்சேவிடம் உரிய முறையில் எடுத்துரைத்து, அவரின் உள்ளத்தின் ஓரத்தில் இருக்கும் தீயை அணைத்து, அவரை நல்வழி நியாய வழிப்படுத்தி, ஈழத் தமிழர்களுக்கு உதவிடும் அக்கறையான நடைமுறையை மேற்கொள்ள பெரிதும் வலியுறுத்துவார் என நம்புகிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com