

விருதுநகர்:
கொரோனா தடைகாலம் உள்ள மே 3-ந் தேதி வரை 11 நாட்களுக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 8 அம்மா உணவகத்திலும் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்க விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ. 8 லட்சத்து 60 ஆயிரத்தை கலெக்டர் கண்ணனிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் சமூக ஆர்வலர்கள், பொதுநல விரும்பிகள், தொழிலதிபர்கள் ஆகி யோரை ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாகம் பொது மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
அம்மா உணவகம் மூலம் அனைவருக்கும் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு அ.தி.மு.க. அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் விழிப்புணர்வும்தான் காரணம்.
மருத்துவர்கள் இறைவனின் தொண்டர்கள் என முதல்வர் கூறியுள்ளார். மருத்துவர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்துக்கு வழங்கப்படும் நிதி உதவியை 10 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்தி உள்ளார். அரசு அதிகாரிகள் இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் தடுப்பில் அரசின் நடவடிக்கையை நடு நிலையாளர்கள் ஊடகவியலாளர்கள் அனைவரும் பாராட்ட வேண்டும். பாராட்ட மனமில்லை என்றாலும் குறை சொல்ல கூடாது. குறைகளை மட்டுமே கூறிக்கொண்டே இருந்தால் நிறைகள் கண்ணுக்கு தெரியாது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஒரு மாத காலமாகியும் தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை. அந்த அளவு மக்களை தமிழக அரசு பார்த்துக் கொள்கிறது. வெளிப்படையான நிர்வாகத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.