

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
கேள்வி- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது நேரில் சந்தித்தது தொடர்பாக அமைச்சர்கள் மாறுப்பட்ட கருத்துக்களை கூறுகிறார்களே? உங்கள் கருத்து என்ன?
பதில்- யார் யார் கருத்து கூறுகிறார்களோ, அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
கேள்வி- நீங்கள் ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை பார்த்தீர்களா?
பதில்- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரி தலைவர், மற்றும் அங்கிருந்த சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் கூடவே இருந்து சிகிச்சை அளித்த குறிப்பிட்ட டாக்டர்களிடம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை பற்றி கேட்டறிந்தேன்.
கேள்வி- டி.டி.வி. தினகரன் தற்போது முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களை இம்சை அரசன், புலிகேசிகள் என பேசிவருகிறாரே? அதுப்பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்-அவர் பேசும் வார்த்தைகளில் இருந்து அவரது தரம் என்ன என்பதை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்.
கேள்வி- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என எதிர்கட்சிகள் கூறியிருக்கிறார்களே?
பதில்- ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்பு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றார்கள். தற்போது முதல்-அமைச்சர் விசாரணை கமிஷன் அமைத்துள்ளார். சிறந்த அனுபவம் வாய்ந்த விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட நீதிபதியை நியமித்து உள்ளார். இதுவே மிகப்பெரிய வரவேற்கத்தக்கது.
கேள்வி- ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என முன்பு ஓ. பன்னீர்செல்வம் கூட கேட்டு இருந்தாரே?
பதில்- இப்போது அவர் கேட்டு இருக்கிறாரா?
கேள்வி- அமைச்சர்கள் வீடுகளில் ஐ.டி. ரெய்டு நடத்தியதின் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாக கூறப்படுகிறதே?
பதில்- அதுப்பற்றி எனக்கு தெரியாது.
கேள்வி- ஜெனீவாவில் வைகோவை தாக்க நடந்த முயற்சிக்கு பிரதமரோ, முதல்-அமைச்சரோ ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே.
பதில்- சம்பவம் நடந்த உடனேயே அவருக்கு தேவையான பாதுகாப்புகள் அளிக்கப்பட்டு விட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் நாங்கள் கண்டனம் தெரிவித்து இருப்போம்.
கேள்வி- ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இணைத்து கொண்டது போல டி.டி.வி.தினகரனுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா?
பதில்- காலம் தான் பதில் சொல்லும்.