காஷ்மீர் சிறப்பு அதிகார சட்ட பிரச்சினை: பரூக் அப்துல்லாவுடன் முதல்-மந்திரி மெகபூபா முப்தி சந்திப்பு

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகார சட்டம் தொடர்பான முடிவு விரைவில் வெளியாகும் நிலையில், அம்மாநில முதல்-மந்திரி மெகபூபா முப்தி திடீரென பரூக் அப்துல்லாவை சந்தித்து பேசியுள்ளார்.
காஷ்மீர் சிறப்பு அதிகார சட்ட பிரச்சினை: பரூக் அப்துல்லாவுடன் முதல்-மந்திரி மெகபூபா முப்தி சந்திப்பு
Published on

ஸ்ரீநகர்:

மற்ற மாநிலங்கை போல் அல்லாமல் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரத்தை அரசியல் சாசன சட்டம் ஆர்டிக்கல் 35-ஏ அளிக்கிறது.

ஆனால், இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விரைவில் இதன் மீது முடிவு எடுக்கப்பட இருக்கிறது. இதனால் இந்த சட்டம் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது, காஷ்மீர் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வருகிற 12-ந் தேதி பிரிவினைவாத இயக்கங்கள் சார்பில் காஷ்மீரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

இதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்தால் காஷ்மீரில் போராட்டம் வெடிக்கும். மோசமான நிலை உருவாகும் என்று கூறினார்.

மேலும் முதல்-மந்திரி மெகபூபா முப்தி காஷ்மீருக்கு எந்த பங்கமும் ஏற்படாத வகையில் இந்த வி‌ஷயத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து மெகபூபா முப்தி நேற்று திடீரென பரூக் அப்துல்லா வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். 20 நிமிட நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது சிறப்பு அதிகார சட்டம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கலாம் என்று ஆலோசித்ததாக தெரிகிறது.

சந்திப்பு குறித்து பரூக் அப்துல்லாவோ, மெகபூபாவோ எந்த கருத்தும் வெளியிடவில்லை. ஆனால், மெகபூபா கட்சியின் மந்திரி நயீம் அக்தர் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

எங்கள் இரு கட்சிகளும் தனித்தனி கொள்கை கொண்டது. அதே நேரத்தில் காஷ்மீரை பாதுகாக்கும் வி‌ஷயத்தில் நாங்கள் ஒரே எண்ணத்தில் இருக்கிறோம். இதற்காகத்தான் பரூக் அப்துல்லாவை எங்கள் முதல்-மந்திரி சந்தித்து இருக்கிறார். மாநிலத்தின் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால் இதுபற்றி ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு அரசியல் சாசன சட்டம் சில பாதுகாப்புகளை வழங்குகிறது. ஆனால், அதை பலவீனப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அப்படி ஒரு சூழ்நிலை எழுந்தால் நிலைமை மிக மோசமாகி விடும். இதை தடுக்க வேண்டும். மாநில நிலையை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக இருவரும் பேசி இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com