தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு- கனிமொழி

தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று சுசீந்திரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கனிமொழி கூறினார். #DMK #Kanimozhi #Tasmac
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு- கனிமொழி
Published on

அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் ஈரோடு தி.மு.க. மாநாடு விளக்க பொதுக்கூட்டம் சுசீந்திரம் தெற்கு ரத வீதியில் நடந்தது.

கூட்டத்தில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில், ஏழை மக்களின் பிள்ளைகளும் மருத்துவம் படிக்கவேண்டும் என்று தி.மு.க. ஆட்சி காலத்தில் அதிக மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஆனால், மத்திய அரசு ‘நீட்‘ தேர்வை புகுத்தி ஏழை மாணவர்களின் மருத்துவ வாய்ப்பை தட்டி பறிக்கிறது.

காவிரி பிரச்சனையில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்தே வந்திருக்கிறது. நீட் மற்றும் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது.

தமிழகத்தில் அ.தி.மு.க.வின் பின்னால் இருந்து கொண்டு பாரதிய ஜனதா ஆட்சியை நடத்துகிறது. காமராஜரும், அண்ணாவும் அமர்ந்த இடத்தில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். அமரும் நிலை வந்தது வருத்தத்துக்கு உரியது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பிரதமரை சந்திக்க டெல்லி செல்வதாக கூறிவிட்டு, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். ஆனால், தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க பிரதமருக்கு நேரம் இல்லை என அவரது அலுவலகம் கூறி இருக்கிறது. தமிழகத்தில் விவசாயிகள் தங்களின் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க பிரதமர் மறுக்கிறார்.

காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் பாரதிய ஜனதா மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள். மத்தியில் உள்ள பாரதிய ஜனதா ஆட்சியை அகற்ற மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒக்கி புயலால் குமரி மாவட்டம் கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. ரப்பர், வாழை மரங்கள் சேதமடைந்தன. ஆனால் அதற்கான இழப்பீடு சரியான வகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இந்த வி‌ஷயத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைத்துள்ளது.


தாம் வென்றவுடன் இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வாங்கி தருவேன் என்று கூறி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஜூலை போராட்டம் நடத்தினார். ஆனால் தேர்தல் வெற்றிக்கு பின்னர் அவர் அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக அவர் இந்துக்களை ஏமாற்றியுள்ளார்.

குமரி மாவட்டத்தில் தற்போது வரை ரப்பர் தொழிற்சாலை அமைக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வருவதற்கு பதிலாக மக்களுக்கு எதிரான திட்டங்களையே கொண்டு வருகின்றனர். இவற்றையெல்லாம் மாற்ற தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும்.

முன்னதாக கனிமொழி எம்.பி. அளித்த பேட்டி வருமாறு:-

காவிரி நீர் பிரச்சனையில் பிரதமரை முதல்-அமைச்சர் கண்டிக்க முடியாமல் இருப்பது தமிழகத்துக்கு அவமானம் ஆகும். தமிழகத்தில் சில இடங்களில் மதுக்கடைகளை மூடினாலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு தான் இருக்கிறது. மதுக்கடைகள் இருப்பதால் இளைஞர் சமுதாயம் கெட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் விதவைகள் ஆகின்றனர். கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு என கூறினோம். தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் இந்த ஆட்சி அகற்றப்பட்டால் தான் விடிவு காலம் வரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com