‘இளவரசன் கொலை செய்யப்படவில்லை தற்கொலை தான் செய்து கொண்டார்’- நீதிபதி அறிக்கையில் தகவல்

இளவரசன் கொலை செய்யப்படவில்லை, தற்கொலை தான் செய்து கொண்டார் என்று தமிழக அரசுக்கு நீதிபதி அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இளவரசன் கொலை செய்யப்படவில்லை தற்கொலை தான் செய்து கொண்டார்’- நீதிபதி அறிக்கையில் தகவல்
Published on

தர்மபுரி:

தர்மபுரியை அடுத்த நத்தம் காலனியை சேர்ந்தவர் இளவரசன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மோதல் ஏற்பட்டது.

இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் அந்த பெண் தனது பெற்றோருடன் செல்ல மறுத்து, இளவரசனுடன் தான் செல்வேன் என்று கூறி சென்றார். இதில் மனம் உடைந்த அந்த பெண்ணின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இரு சமூகத்தை சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவம் நடந்தது. இதில் 35-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமானது.

இதற்கிடையில் தந்தை இறந்த நிலையில் இளவரசனுடன் இருந்த அந்த பெண் தனது தாய் வீட்டிற்கு சென்றார். அதன் பிறகு இளவரசனிடம் செல்லவில்லை. இந்த நேரத்தில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரியின் பின் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் இளவரசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரிடம் இருந்து 4 பக்க கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் 2013-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி நடந்தது. தங்களது மகனை அடித்து கொலை செய்துவிட்டதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர். இதையடுத்து இந்த வழக்கு தர்மபுரி சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் இளவரசன் தற்கொலை தான் செய்து கொண்டார் என்று சி.பி.சி.ஐ.டி. நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் இதனை அவரது பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதுதொடர்பாக நீதிபதி தலைமையில் கமி‌ஷன் ஒன்றை அமைத்து விசாரிக்க வேண்டு என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் கமி‌ஷன் ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி நீதிபதி சிங்காரவேலு அறிக்கையை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தாக்கல் செய்தார். ஒரு ஆண்டு ஆகியும் அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவிலல்லை. அந்த அறிக்கையின் சாராம்சம் ஒரு இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

இளவரசனின் இறப்பானது தற்கொலை தான் என்றும் அவரது இறப்பில் வேறு காரணங்கள் எதுவும் இல்லை என்றும் விசாரணையின் போது ஆய்வு செய்யப்பட்ட ஆவணங்கள், மருத்துவம் மற்றும் தடய அறிவியல் சான்றிதழ்கள், சாட்சிகளின் வாக்கு மூலங்கள், சந்தர்ப்ப சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து தெளிவாக தெரியவருகிறது.

விசாரணையின் போது நான் (நீதிபதி) மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் விசாரணையில் இறந்து போன இளவரசன் தன்னை விட்டு அந்த பெண் பிரிந்து சென்ற காரணத்தால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இளவரசன் வழக்கு முடிவுக்கு வந்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தெரிவித்தனர்.

இதே நேரத்தில் வீடுகளுக்கு தீ வைத்த வழக்கு விசாரணை முடிந்து தர்மபுரி நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இந்த வழக்கு இன்னும் ஒரு வாரத்தில் விசாரணைக்கு வரும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com