அமெரிக்காவில் இவாங்கா டிரம்ப் உதவியாளருக்கு கொரோனா

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகளான இவாங்கா டிரம்பின் அந்தரங்க உதவியாளருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவங்கா டிரம்ப்
இவங்கா டிரம்ப்
Published on

வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மூத்த ஆலோசகராக அவரது மகள் இவாங்கா டிரம்ப் உள்ளார். இவரது கணவர் ஜாரெட் குஷ்னரும், டிரம்பின் ஆலோசகராக பதவி வகிக்கிறார்.

இந்த நிலையில், இவாங்கா டிரம்பின் அந்தரங்க உதவியாளருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவர் பல வாரங்களாக இவாங்கா டிரம்புடன் காணப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

2 மாதங்களாக அவர் இவாங்காவுடன் தொலைதொடர்பு சாதனங்கள் வழியாக ஆலோசனை பெற்று பணியாற்றி வந்ததாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன. அவருக்கு கொரோனா தாக்குதலுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.

இருப்பினும் இவாங்காவும், அவரது கணவர் ஜாரெட் குஷ்னரும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என தெரிய வந்தது.

ஏற்கனவே அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சின் ஊடக செயலாளர் கேட்டி மில்லருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.

இதன் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தினமும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள முன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com