வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா?: கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி கிங்ஸ்டனில் இன்று நடக்கிறது. இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா?: கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது
Published on

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தான நிலையில் அடுத்த இரு ஆட்டங்களில் இந்திய அணி முறையே 105 ரன், 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4-வது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இருப்பினும் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கிங்ஸ்டனில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. முந்தைய ஆட்டத்தில் வெஸ்ட இண்டீஸ் நிர்ணயித்த 190 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் இந்திய அணி 178 ரன்களில் அடங்கிப்போனது.

அதில் ஆமை வேகத்தில் விளையாடிய முன்னாள் கேப்டன் டோனி 114 பந்துகளில் 54 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் 70 பந்துகளில் ரன்னே எடுக்கவில்லை. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவர் என்ற சிறப்புக்குரிய டோனி அந்த தன்மையை இழக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பரிகாரம் தேட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். இந்திய அணியில் ரஹானேவின் பேட்டிங் மட்டுமே சீராக (ஒரு சதம், 3 அரைசதம்) உள்ளது. மற்றவர்களும் பொறுப்புடன் செயல்பட்டால் தான் தொடரை கைப்பற்ற முடியும்.

இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில்:-

‘4-வது ஒரு நாள் போட்டி சாதகமாக அமையவில்லை. அதை அனுபவமாக எடுத்துக் கொண்டு இனி வரும் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி எங்களது திறமையை நிரூபிப்போம். கடைசி ஆட்டத்தில் அச்சமின்றி விளையாடுவோம். எப்போதும் நான் சூழ்நிலைக்கு தகுந்தபடியே ஆடுகிறேன். அணிக்காக ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.’ என்றார்.

வெஸ்ட் இண்டீஸ் அனுபவம் இல்லாத அணி என்ற போதிலும் 4-வது ஆட்டத்தில் பெற்ற வெற்றி அவர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்திருக்கும். அதே உத்வேகத்துடன் இந்த ஆட்டத்திலும் இந்தியாவுடன் மல்லுகட்ட ஆயத்தமாகி வருகிறார்கள். 3 ஆட்டத்திலும் முதலில் பேட் செய்த அணியே வெற்றிக்கனியை பறித்திருப்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த மைதானம் வெஸ்ட் இண்டீசுக்கு ராசியானதாகும். இங்கு கடைசியாக ஆடிய 9 ஆட்டங்களிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரஹானே, விராட் கோலி (கேப்டன்), தினேஷ் கார்த்திக் அல்லது யுவராஜ்சிங் அல்லது ரிஷாப் பான்ட், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ஷமி.

வெஸ்ட் இண்டீஸ்: எவின் லீவிஸ், கைல் ஹோப், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ், ஜாசன் முகமது, ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ரோவ்மன் பவெல், ஆஷ்லே நர்ஸ், தேவேந்திர பிஷூ, அல்ஜாரி ஜோசப், கேஸ்ரிக் வில்லியம்ஸ்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com