3 நியமன எம்.எல்.ஏ.க்களை நான் பரிந்துரைக்கவில்லை: கவர்னர் கிரண்பேடி திடீர் மறுப்பு

புதுவையில் பா.ஜ.க. 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்கும்படி நான் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை. மத்திய அரசே அவர்களை நியமித்திருக்கிறது என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
3 நியமன எம்.எல்.ஏ.க்களை நான் பரிந்துரைக்கவில்லை: கவர்னர் கிரண்பேடி திடீர் மறுப்பு
Published on

புதுவை சட்டசபையில் 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்க அதிகாரம் உள்ளது. அதன்படி பா.ஜனதாவை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்தனர்.

பொதுவாக மாநிலத்தில் ஆளும் அரசின் சிபாரிசின் பேரில் மத்திய அரசு இந்த நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிப்பது வழக்கம். ஆனால் இந்த தடவை கவர்னர் கிரண்பேடி சிபாரிசின் பேரில் மத்திய அரசு நேரடியாக 3 பேரையும் நியமித்ததாக கூறப்பட்டது. இதற்கு புதுவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இன்று பந்த் போராட்டமும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் நான் சிபாரிசு செய்யவில்லை என்று கவர்னர் கிரண்பேடி திடீரென கூறியிருக்கிறார்.

அவர் இன்று புதுவையில் வளர்ச்சி பணிகளை பார்வையிடுவதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துக்கொள்ள மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. யூனியன் பிரதேச சட்டத்தில் இது கூறப்பட்டுள்ளது. அதன்படி தான் 3 பேரை மத்திய அரசு நேரடியாக எம்.எல்.ஏ.வாக நியமித்துள்ளது. மத்திய அரசு நியமித்ததால் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள சட்ட அதிகாரத்தின்படி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தேன்.

இவர்களை நியமிக்கும்படி நான் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை. மத்திய அரசே அவர்களை நியமித்திருக்கிறது.

இந்த நிலையில் எனக்கு எதிராக போராட்டங்களும், முழு அடைப்பும் நடைபெறுவது ஆச்சரியத்தை அளிக்கிறது. இது மக்கள் சேவைக்கு எதிராக நடக்கும் போராட்டமாகும். முழு அடைப்பால் புதுச்சேரியின் வருமானமும், வளர்ச்சியும் பாதிக்கப்படும்.

இவ்வாறு கிரண்பேடி கூறினார்.

3 எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்தது தொடர்பான உத்தரவில் மத்திய உள்துறை இணைச்செயலாளர் ஸ்ரீவஸ்தவா கையெழுத்திட்டிருந்தார். அதில் கடந்த மாதம் 23-ந்தேதி கையெழுத்திடப்பட்டிருந்தது.

ஆனால் அவர்கள் நியமிக்கப்பட்ட தகவல் புதுவையில் கடந்த 3-ந்தேதி தான் வெளிவந்தது. 4-ந்தேதியே அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நியமனம் தொடர்பாக ஏற்கனவே பேட்டியளித்த கவர்னர் சட்டப்படி அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற கருத்தை மட்டுமே கூறி வந்தார். முழுமையான தகவல்களை வெளியிடவில்லை.

எனவே கவர்னர் பரிந்துரையின் பேரில் 3 பேரும் நியமிக்கப்பட்டார்களா? அல்லது மத்திய அரசே தன்னிச்சையாக நியமித்துக் கொண்டதா? என்ற கேள்வி எழுந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com