கடற்கரை சாலையில் சிவாஜி சிலையை மீண்டும் நிறுவும் தேதியை அறிவிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

கடற்கரை சாலையில் சிவாஜி சிலையை மீண்டும் நிறுவும் தேதியை அறிவிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடற்கரை சாலையில் சிவாஜி சிலையை மீண்டும் நிறுவும் தேதியை அறிவிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
Published on

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் பிறந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாடகத்திலும், சினிமாவிலும் திறம்பட நடித்தவர். இவர் தன் நடிப்பாற்றலால் கலைத்துறையையும், ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர். திரையுலகில் தன்னிகரற்ற நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் திரைத் துறையின் மூலம் இந்தியாவின் புகழை உலகிற்கு உணர்த்தியவர்.

சிவாஜி கணேசன் தேசிய எண்ணம் கொண்டவர். பெருந்தலைவர் காமராஜரை தலைவராக ஏற்று செயல்பட்டவர். அப்படிப்பட்ட ஒர் உன்னத தலைவர், சிறந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு மணிமண்டபத்தை எழுப்பி, அதனை சிவாஜி கணேசனின் 90-வது பிறந்த நாளான நாளை அக்டோபர் 1, ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக திறக்க இருக்கிறது.

நடிகர் திலகம் நடிப்புலகில் பல்கலைக்கழகம். எனவே சென்னை மெரினா கடற்கரையிலே இருந்து எடுக்கப்பட்ட சிவாஜி கணேசன் உருவச்சிலையை அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அதே கடற்கரையிலேயே அரசியல் தலைவர்கள், அறிஞர்கள், சிலை அமைத்திருக்கும் இடத்தின் அருகிலேயே ஒரு மையப்பகுதியை தேர்ந்தெடுத்து மீண்டும் சிவாஜி கணேசன் உருவச் சிலையை நிறுவுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு இந்த மணிமண்டபம் திறக்கும் நன்னாளிலே அறிவிக்க வேண்டும்.

அவரது சிலையை இந்த வருட இறுதிக்குள் சென்னை மெரினா கடற்கரையிலே நிறுவுவதற்கான உயர் பணிகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இது தமிழக அரசு தமிழக கலைத்துறைக்கு செய்யும் போற்றுதலுக்குரிய பணியாக அமையும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com