

திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று சில ஆண்டுகளாகவே பலதுறையை சேர்ந்தவர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். ஜனநாயகத்தில் ஒரு கட்சி தொடங்குவதும், மக்களை சந்திப்பதும் புதிது அல்ல. யாரும் அதற்கு தடையாகவோ, இடையூறாகவோ இருக்க முடியாது.
அதே நேரத்தில் மக்கள் பணியினை அவர்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றார் போல் செய்தால் அதற்கான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ரஜினிகாந்த் பல நேரங்களில் அரசியல் யுகங்களில் வெற்றி கண்டு உள்ளார். ரஜினிகாந்த் அரசியல் ஆழம் தெரிந்தவர். அவரை யாரும் இயக்க முடியாது என்பது எனது கருத்து.
உள்ளாட்சி தேர்தல் என்பது முக்கிய தேர்தல். உள்ளாட்சி தேர்தலில் இடைதேர்தல் போன்று ஒருபோதும் நடக்கக்கூடாது. பொதுவாக தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரையில் தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். தேர்தல்கள் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு நடைபெறுவதைவிட சந்தேகத்திற்கு ஏற்றவாறு நடக்கிறது என்ற மனநிலை ஏற்பட்டு உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். வருகிற 8-ந் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர், பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
#Rajinikanth #RajinikanthPoliticalEntry #RajinikanthFansMeet #TamilNews