ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய கோரிய மனு தள்ளுபடி - எழும்பூர் கோர்ட் உத்தரவு

பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்து பேசிய ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிய மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Published on

சென்னை:

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

அப்போது, 1971-ம் ஆண்டு சேலத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர் பெரியார் தலைமையில் பேரணி நடந்தது என்றும், அப்போது நிர்வாண நிலையில் ராமர், சீதை உருவப்படங்கள் தூக்கிச் செல்லப்பட்டது என்றும் ரஜினிகாந்த் பேசினார்.

இவரது பேச்சு இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக உள்ளதாகவும், எனவே, ரஜினிகாந்த் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் திருவல்லிக்கேணி போலீசில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், போலீஸ் கமி‌ஷனரிடம் கடந்த ஜனவரி 20-ம் தேதி புகார் செய்தார். அவரும் நடவடிக்கை எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், போலீசில் புகார் கொடுத்து விட்டு காத்திருக்காமல் முன்கூட்டியே ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறினார். இதையடுத்து இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

இதற்கிடையே, சென்னை 2-வது குற்றவியல் கோர்ட்டில் ரஜினிகாந்துக்கு எதிராக உமாபதி மனுதாக்கல் செய்துள்ளார்.

அதில், ஜனவரி மாதம் திருவல்லிக்கேணியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் பொய்யான தகவலை கூறியுள்ளார். இதன்மூலம் இரு பிரிவினர்களுக்கு இடையே பகையை ஏற்படுத்தி மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டுள்ளார். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீஸ் கமி‌ஷனர் ஆகியோரிடம் உடனடியாக புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, என் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸ் கமி‌ஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். 

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிமன்றம், ரஜினி மீது வழக்கு பதியக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com