ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்- வெளியுறவுத் துறை மந்திரிக்கு முதல்வர் கோரிக்கை

ஈரானில் இருந்து நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் 650 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளியுறவுத் துறை மந்திரிக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஈரான் நாட்டின் சிருயே, கிஷ், லவான், பந்தர்-இமொகம், அசாலுயே உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தமிழக மீனவர்கள் 650 பேர், நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை தேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மீனவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் அவர்களை உடனடியாக இந்தியா திரும்புவதற்கு ஏற்பாடு செய்வது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உத்தரவிடும்படி ஏற்கனவே நான் 28-2-2020 அன்று கடிதம் எழுதியிருந்தேன்.

உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் வழங்கும்படி மீனவர்களிடம் இருந்தும், அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்தும் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. எந்த வசதியும் இன்றி அன்னிய மண்ணில் தவிப்பதாக கூறுகின்றனர். 

எனவே, தமிழக மீனவர்களுக்கான உணவு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் அவர்கள் விரைவில் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com