கடைசி மீனவர் மீட்கும் வரை தேடுதல் தொடரும்: ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் பதில்

ஒக்கி புயலில் சிக்கி மாயமான கடைசி மீனவர் மீட்கும் வரை தேடுதல் பணி நடைபெறும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். #TNAssemly
கடைசி மீனவர் மீட்கும் வரை தேடுதல் தொடரும்: ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் பதில்
Published on

சென்னை:

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அரசின் திட்டங்களை பாராட்டிய ஆளுநர் பன்வரிலால் புரோகித் பல்வேறு திட்டங்களையும் அறிவித்தார். ஆளுநர் உரையை அடுத்து சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.

அப்போது, வரும் வெள்ளிக்கிழமை வரை அவை நடக்கும் என்றும், இறுதி நாளன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பேசுவார் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டசபையின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 12 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஒக்கி புயலால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, ஒகி புயல் குறித்து உரிய முன்னெச்சரிக்கை விடப்படவில்லை என குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்க்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

புயல் உருவாகும் முன்னரே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது. தொலைத்தொடர்பு வசதி இல்லாததால் ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க முடியவில்லை. புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட்டது.

திசை மாறி பிற மாநிலங்களுக்கு சென்ற மீனவர்களை, 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூலம் டீசல், உணவுப்படி வழங்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். ஒகி புயலால் மாயமான 3522 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியுள்ளனர். கடைசி மீனவர் மீட்கும் வரையில் தேடுதல் பணி தொடரும்.

ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினேன். வானிலை விவரங்களை மீனவர்களுக்கு தமிழில் தெரிவிக்க பிரத்யேக செயற்கைக்கோள் அனுப்ப பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com