

திண்டுக்கல்-மதுரை நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் மரணமடைந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அம்பாத்துரை கிராமத்தில் திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், அமளி நகர் பிரிவு அருகே 5-ந் தேதியன்று (நேற்று) மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த மதுரை மாவட்டம், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சமணச்செட்டியாரின் மனைவி சீனியம்மாள்; திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூரைச் சேர்ந்த ஸ்டீபனின் மகன் பெனிடிக்ட் சஞ்சய்;
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கணேசனின் மகன் சோமசுந்தரம்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த வைகுண்டராமனின் மகன் நாராயணன் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சாலை விபத்தில் 13 நபர்கள் பலத்த காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.